Thursday, 13 December 2012

மரச்சிணி




கனடாவிலும் தமிழர் சாதி பார்க்கிறார்களா?

இல்லைஎனச் சொல்ல முடிவதில்லை. தமிழ்நாட்டில் உள்ளளவு ஒடுக்கு முறை இங்கு குறைவே தவிர, இல்லை என்பதல்ல அர்த்தம். இங்கு பொருளாதார சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. யாரும் யாரிலும் தங்கிவாழவேண்டிய அவசியம் இல்லை. இருந்தும் எங்கெங்கு சுட்டமுடியுமோ அங்கெல்லாம் சாதி சொல்லிச் சுட்டி விடத்தான் பார்க்கிறார்கள்.

பாடசாலைக் காலத்திலிருந்து ஒரு காதல் ஜோடி மிகஅன்னியோன்யாகப் பழகினார்கள். இது தாய் தந்தையருக்கும் தெரிந்திருந்தது. திடீரெனப் பிரிந்துவிட்டார்கள். பெடியன் சற்று மனமுடைந்து போயிருந்தான். என்ன நடந்ததென பெற்றோர் மகனிடம் விசாரித்தார்கள். மகன் சொன்னான், “அப்பா! நாங்கள் பள்ளமாம். அவர்கள் ஏதோ வெள்ளமாம். அதனால் அவளைத் தன்னுடன் பேசக்கூடாது என்று தடுத்துவிட்டார்களாம்.”

"பள்ளத்தைக் கண்டால் வெள்ளம் ஓடத்தான் செய்யும்"

தகப்பனார் மகனைத் தேற்றினார். இந்த அளவிற்தான் கனடாத் தமிழரிடை சாதீயம் உள்ளது. அல்லது ஒருவர் முன்னேற்றங்கண்டு அடுத்தவர் சாதி சொல்லிப் பொருமுவதோடு முடிந்துவிடும். வேலையில் ஒருவர் புதிதாக இணைந்கொண்டால் அவர் மற்றப் பக்கம் என்றோ அல்லது மரம், கல்லு, கத்தி, வலை என்று ஏதாவதொன்றின் மூலம் ஒருவருக்கொருவர் குறிப்புணர்த்திக் கொள்ளுவதோ நிகழாமல் இல்லை. அதற்கு மேலும் பார்ப்பதானால், சில முற்போக்கு அரசியல் இலக்கியம் பேசுவோர் இங்கு சாதீய எதிர்ப்புக்கூட்டங்களை நிகழ்த்துவார்கள். இதுவே யதார்த்தம்.

ஒரு பத்து வருடங்களுக்கு முன் ஒருசம்பவம் நடந்தது. ஒரு பெண், ஒருவரைக் காதலித்தார். பெண்ணின் சகோதரன் தன் மைத்துனனுடன் சேர்ந்து அவளைத் தாக்கிவிட்டான். ஈற்றில் அவள் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தான். இவ்விடயம் கனேடிய ஊடகங்களில் பலமாக பேசப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் சார்பில் சமூகசேவைப் பகுதியில் கடமையாற்றும் ஒருவர் தமது செவ்வியில் "தமிழர்கள் எல்லோரும் அப்படியல்ல. சாதியில் குறைந்தவர்கள்தான் இப்படியான செயல்களைச் செய்பவர்கள்எனக் குறிப்பிட்டிருந்தார்.

இச்செவ்வியானது பலரை கோபத்துக்குள்ளாக்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் கூட வெளிவந்தன. இதே கோபம் எனக்கும் இருந்தது. அப்போதெல்லாம் ஓவியர் கருணாவின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வேன். அது ஒரு ஓவியக்கூடம் போலவே இருக்கும். அவர் "குளிரும் நிலவு" இசைத்தட்டு மேலட்டைக்காக ஒரு மரமேறியின் ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தார். நீல நிலவொளியில் மிக அழகாக அமைந்த ஓவியம் அது. இவ்விரு சூழலுமே இக்கவிதை எழக் கரணமாக அமைந்தது.  

இக்கவிதைக்கு முதலில் "மரச்சிணி" எனத் தலைப்பிட்டேன். அதை முதல் வாசிப்பில் பார்த்த சிலர் விரும்பவில்லை. அதனால் பின்தீஎன மாற்றிக் கொண்டேன். ஐந்துநிலம், ஏழுகடல் தாண்டியும் கழுவமுடியாத அகத்தோடு வாழும் சாதித்திமிர் பிடித்த மனிதரைப் பார்க்கும் போது, அதற்குமரச்சிணிஎன்ற தலைப்பே பொருத்தமாயிருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது

தீ

கொடுங் குளிர்
நேற்று முழுவதும் உலாவித் திரிந்த காற்று
உருக் கொண்டெழுந்ததில்
குலையும் உறைகிறது
துருவேறிக் கனக்கிறது  மனது

அன்று ஆடிமாசம்:
நானும் விடலை; சோளகமும் விடலை
பேய்க்காற்றில் சதிராட்டம் போடுகின்றன
 உயரிப் பனைகள்

காற்றுக்(கு) அஞ்சி  வீட்டினுள் கிடந்தால்
உடலினை பற்றாதோ பஞ்சி?
இறுகக் கட்டிய கொடுக்கு கச்சைமேல்
இறுக்கிக் கிடக்கிறது இயனக்கூடு
மாரிலே ஏறுபட்டி
தடநார் வளையத்துள்
கால் நுழைத்து;  உதைத்து;  ஏறி ;வகுத்து
வட்டுள் நுழைந்து
சீவி வருகிறேன்  
நொடிப் பொழுதுள்
சுரைக் குடுவையை நிறைத்திருக்கிறது
புதுக் கள்ளு
அத்தனையும் தித்திப்பு

எத்தி ;குளவி நுரை தள்ளி
பிளாவில் நிறைத்த
ஒற்றைப் பனைக் கள்ளின் சுவையில்
கிறுகிறுத்துப் போகிறேன்

இன்று
முற்றத்துக் கிளுவையிலே கொளுவி விட்ட முட்டி
நார் இற்று வீழ்ந்து
நொருங்கிப் போயிருத்தல் கூடும்
தலை வாசல் தாழ்வாரத்தில் விட்டுவந்த
இயனக் கூட்டுள்
துருவேறி முனை மழுங்கி கிடக்கும் பாளைக்கத்தி
எல்லாம் இழந்தோம் ; எல்லாமும் இழந்தோம்
இழப்பில் என் வர்ணம் மறந்திருந்தேன்
மீளத் தொடர்ந்து
மரச்சிணி போல் நாறி
கனன்று எரிகிறது
துருவேறிக் கனக்கிறது மனது

தீட்டுக் கட்டையில் சட்டியோட்டை நொருக்கி
துகளாக்கி
பாளைக் கத்தி பளபளக்கத் தீட்டி
கூர்பார்க்க அரிப்பெடுக்கிறது
கை

பனையில்லை என்றால் என்ன?
●●●

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..