Monday, 17 December 2012

சிறை






சிறை 


நான் அந்த ஓவியத்தை வரையத்தொடங்கிய போது 
வானம் கருக்கொண்டிருந்தது.
மழை மேகவண்ணத்தால் பின்புலத்தை தீட்டினேன்

காற்று குதிரையில் பாயும் முகில்களுக்கிடையே
சின்னதோர் விரிசல்
ஒளி பாய்ந்;தது
அதையே பிடித்து வாயில் சமைத்தேன்
கரிய பறவைகள் தென்திசை பார்த்து ஊடறுத்தன
கம்பிக்கிராதிகளால் கதவு சமைத்தேன்

வீழ்ந்தது இருள்
அதை துரிகையில் தோய்த்;து
பெரியதோர் பூட்டுடை தொங்கவிட்டேன்

அமைந்தது 
திரையில்
கொடிய சிறைக்கூடம் 

ஒரிரு நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின
இரண்டைப் பிடித்து கண்களில் பொருத்தி
வாயிலில் ஒருவனை காவல் நிறுத்தி
அவனது கைகளில் எழுதினேன்
துவக்கை.

இருந்தும் வெறுமை. 

தூரிகையை வைத்துவிட்டு
மெல்ல உள்ளே நுளைந்து அமர்ந்துகொண்டேன்.

பார்ப்பவரெல்லாம்
தத்ரூபமாக இருக்கிறது ஓவியம் என்கிறார்கள்

மனசில் பதட்டம்.
உள்ளேயிருந்து
தவிக்கிறேன்

திறவுகோலை தீட்டமறந்த நான்.

டிசம்பர் 14. 2012

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..