1999 என்று நினைவு.
அன்று கவிஞர் செழியனின் ஒரு கவிதை நூல் வெளியீடு. ‘மிட்ஸ்காபரோ’ மையத்தில் நிகழ்ந்தது. விழா முடிய நண்பர்கள் எங்கள் வீட்டில் கூடினோம்.அன்று புதிய விருந்தினராக மூவர் எங்களுடன் கலந்து கொண்டனர். அவர்களை கவிஞர் சேரன் அழைத்திருந்தார். மன்சூர் நவாஸ் என இஸ்லாமிய நண்பர்கள் இருவர். அடுத்தவர் “கூடைக்குள் தேசம்” திரட்டைத் தந்த கவிஞர் முரளிதரன். இலங்கையில் இவர்கள் மூவரும் கல்விச் சேவையில் பணிபுரிபவர்கள். உயர்கல்விகாக புலமைப்பரிசில் பெற்று 'யார்க்' பல்கலைக்கழகம் வந்திருந்தனர். அந்த இரவு மிகமிக இனிதாகக் கழிந்ததது.
அன்று தொடங்கியது தான் எமது நட்பு. அவர்கள் தொரன்றோவில் தங்கியிருந்து ஒன்றரை வருடமும் ஒவ்வொரு வார இறுதி விடுமுறை நாட்களும் அவர்களோடுதான் எங்கள் பொழுது கரைந்தது.
இவர்களில் மன்சூர் அவர்கள் அக்கரைப்பற்று ஊரைச் சேர்ந்தவர். இது அவர் தொடர்பாக ஏலவே நான் அறிந்திருந்த தகவல். வெயில் தணியக் குளிர்காலம்தொடங்கியது. . ஒரு வார இறுதி மாலை. அதை எங்கள் வீட்டிலே கொண்டாடினோம். ஊரின் நினைவுகளில் அலைந்தது உரையாடல். நேரம் கரைந்து கொண்டிருந்தது. நான் கிளிநொச்சி தொடர்பாக திடீரென “நானும் கிளிநொச்சி தான்” என்றார் மன்சூர். நான் உற்சாகத்தின் உச்சத்திலிருந்த கணம் அது. எந்த முன்யோசனையுமின்றி ‘அப்ப எப்படி அக்கரைப்பற்றுக்கு போனீர்கள்’ என்றேன். சற்று அசட்டுத்தனமான கேள்விதான். அவருக்கு கணீர் என்ற குரல். எந்தவித பதட்டமுமில்லை. மிகத் தீர்கமான ஒலித்தது பதில்.
‘எங்களைத்தான்
நீங்கள் வாழ்ந்த ஊரைவிட்டு துரத்திவிட்டீர்களே
பேயறைந்தது என்பார்களே! அவரது பதிலில் நான் அப்படித்தான் ஆனேன்;. அந்த அதிர்ச்சியிலிருந்து விலக எனக்கு பல நாட்கள் எடுத்தன.
ஊரில் அந்தக் கொடுமை நிகழ்ந்த போது
நாங்கள் எல்லாம் வாய் மூடி மௌனிகளாக இருந்தோம். பலர் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தனர். கேலிசெய்து கொண்டாடியவர்களும் உண்டு. மனதுக்குள் வேதனைப் பட்டவர்களும் உண்டு. இப்போது நினைக்க நினைக்க வெட்கமும் வேதனையும் எங்கள் மீதான அருவருப்பும் ஒரு விலங்கைப்போல குந்தியிருந்து என்னை சப்பித் தின்றது.
அவர்களது கல்விக் காலம் முடிந்தது. ஊர் திரும்பினர்.. பின்னரும் தொடர்ந்தது எங்கள் நட்பு. அடுத்த கோடைகாலம் வந்தது. மன்சூர் எனக்கொரு நினைவுப்பரிசில் அனுப்பியிருந்தார். அந்தப் பொதியை திறந்ததேன். ஆச்சரியமாக இருந்தது. உள்ளே ஒருஅழகான தூக்கணாங் குருவிக் கூடு.
‘’வயலுக்கு போயிருந்தேன். இரண்டு கூடு எடுத்து வந்தேன். அதில்
உங்களுக்கு அனுப்பியது ஆண் குருவியின்கூடு’’
என்றார்.
குருவிக்
கூட்டிலும் இப்படி பாலின வேறுபாடு உண்டா?.
அவரிடமே
விபரம் கேட்டேன். ஆண் குருவியின் கூடு காவற்பரன் போல. அதற்கு இரன்டு வாயில்கள் உன்டு. குருவி நுழைந்து மேலே செல்ல கீழிருந்து குளாய் போன்ற பகுதி இருக்கும். இடையில் மடி மேலே நீளக் கயிறு. அடுக்களையில் தொங்கும் உறி போல. கூட்டின் மடியில் படுத்தபடி தலைநீட்டிக் காத்திருக்க மேலே பிறிதொரு வாயில் இருக்கும். யன்னல் போல. அதன் காதற் துணையின் கூட்டிற்கு மறுவாயில் கிடையாது. கீழிருந்து ஒரு வாயில் மட்டுந்தான். பேடை அடைபடுக்கும் காலத்தில் ஆண் குருவி காவல் இருக்கும். வேறு விலங்குகள் தன் பேடைக்கு தீங்கிழைக்க முனைந்தால் எச்சரிக்கை குரல் கொடுக்கும். இரண்டும் தப்பிவிடும்.
இயற்கையில் இத்தனை வினோதங்களா? இத்தகை நுட்பமான ஆண் பெண் சமத்துவமா? நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது. மனிதர்கள் தான் இயல்பை தொலைத்துவிட்டோம். இப்போ தேசந்தேசமாக அலைகிறோம். உயிர்ப்பற்ற வெறும் கூடுகளாக.
அந்த நினைவுப் பரிசை அழகாக என் வீட்டுக்கூடத்தில் வைத்திருந்தேன். ஊறைபனி கழிந்து இளவேனில் காலம். காற்றில் மெல்ல வெப்பம் ஏறத் தொடங்கியது. யன்னல் திறந்தேன். திரென நுழைந்த காற்றில் ஆடியது கூடு. உச்சத்தில் ஆடும் ஊஞ்சல் போல. உற்சாகத்தில் என் மனசும்.
அன்று பிறந்தது இக் கவிதை.
இக் குறிப்பை எழுதும் இக்கணத்தில் ஆண்டுகள் பன்னிரண்டு கழிந்துவிட்டது. அவரது நினைவுப் பரிசு இன்றும் என் கூடத்தில் உண்டு. நட்பும் அங்ஙனமே. நான் கூடிழந்து நாடு கடந்து இருபது ஆண்டுகள் கழிந்தது. இன்றும் என் மனப்பறவை என் தேசத்து வானில்தான் அலைந்து கொண்டிருக்கிறது.
தூக்கணாங்குருவிக் கூடு
ஏழுகடல்தாண்டி
ஐந்து நிலங்கடந்து
பனி நிலக்குடிலில் இடம் பிடித்திருக்கிறது
தூக்கணாங் குருவிக் கூடு
ஊரிலிருந்து நண்பன் அனுப்பிவைத்த
நினைவுப் பரிசு
சாளர வழி காற்றூதும்;
கூடு
அசையும்
போரில் அவியும் என் தேசத்து
நினைவதிரும்
ஒரு கூடு முடைய
எத்தனை நாள் முயன்றிருக்கும்
குருவி
நிழல் தேடி
நான் சொல் தேடும் வகையில்
புல்லிதழ் தேடி
பெத்தாச்சி விரலசைவில் இழைகின்ற
கொட்டப் பெட்டியொன்றின் சூட்சுமங்கள்
பொருத்தி
தலைநீட்டிக் காத்திருக்க தலைவாயில்
தந்திரமாய் தப்பிவிட மறுவாயில்
குஞ்சுகட்கு பஞ்சு மடி
தாலாட்டி உறங்க வைக்க நீளக்கயிறென்று
தலைநீட்டிக் காத்திருக்க தலைவாயில்
தந்திரமாய் தப்பிவிட மறுவாயில்
குஞ்சுகட்கு பஞ்சு மடி
தாலாட்டி உறங்க வைக்க நீளக்கயிறென்று
வியர்வையிலே குளித்திருக்கும்
இச் சிறுகாற்றில் கூடசையும் போதில்
செவியில் அதிர்கிறது
கூடிழந்த குருவிகளின் ஒப்பாரி
எனது நிலம்;
பாட்டன் சமைத்த குடில்
எனக்குப் பின் மகளுக்கு
அதற்குப் பின்
அவள் மழலைக்கென எழுந்த
உன் நீளக் கனவெல்லாம் குலைந்து
ஒற்றை நாளில்
துரத்துண்டு
விம்மலையும் விசும்பலையும்
மொட்டாக்கு சேலைக்குள் பொத்தி
காட்டு
எனது நிலம்;
பாட்டன் சமைத்த குடில்
எனக்குப் பின் மகளுக்கு
அதற்குப் பின்
அவள் மழலைக்கென எழுந்த
உன் நீளக் கனவெல்லாம் குலைந்து
ஒற்றை நாளில்
துரத்துண்டு
விம்மலையும் விசும்பலையும்
மொட்டாக்கு சேலைக்குள் பொத்தி
காட்டு
வழி
நடந்த
துயர்
கூடசையும் பொழுதிலெல்லாம்
நினைவில் அறைகிறது
கூடசையும் பொழுதிலெல்லாம்
நினைவில் அறைகிறது
நண்பா!
நெஞ்சங் குமுறுகிறது
இன்று
இக் கூதல்தேசக் குளிரில்
எஞ்சியிருக்கிறது கூடுகள் மட்டுமே
அலைகிறோம்
தேசத்து வெளியெங்கும்
கூடிழந்து
குருவிகளும் நானும்
●●
இளவேனிற்காலம் -2001
நன்றி: "தூறல்" (கனடா)
நெஞ்சங் குமுறுகிறது
இன்று
இக் கூதல்தேசக் குளிரில்
எஞ்சியிருக்கிறது கூடுகள் மட்டுமே
அலைகிறோம்
தேசத்து வெளியெங்கும்
கூடிழந்து
குருவிகளும் நானும்
●●
இளவேனிற்காலம் -2001
நன்றி: "தூறல்" (கனடா)
No comments:
Post a Comment
உங்களிடமிருந்து..