Monday, 24 December 2012

அம்மா



                                                                                                நன்றி: ஓவியம்- Pr Rajan



நினைவுகள் 
பெரும்  சோலைக் காடு
ஞாகக் கோடரியை தீட்டிச் தோளில்  சுமந்தபடி
இருள்  வனத்தில் அலையும்  
நினைவு வெட்டி  
நான்


வனத்தின் அழகு
ஒலியின் மெல்லிய ரீங்காரம்
அதனைப் புறந்தள்ளி
மனதை சுண்டியிழக்கிறது
ஒரு தாய்க் குருவியின்  துயர் நிறை  பாடல்
குந்தியின் சரிதம்

அவளென் நினைவுக் கானகத்தின் முதுமரம்
வனநீலி

தன் ஐஞ்சு குஞ்களுக்கும் உணவு தேடி
அலைந்த கதையைச் சொல்லும் போதில்
நாடோடியின் புல்லங்குழலி ன் பிரவாகம் எழுந்து
மனதைப் பிழிந்து செல்கிறது


கொடிய விலங்குகளிடமிருந்து தன் குஞ்சுகளை
பொத்திக்காத்த கதை பறைகையில்
எழுகிறது
காட்டுப்புயலின் பேரோசை
கானகம் நடுங்க


மௌனம் கனத்த நெடுநீளப் பொழுதுகளில்
அதை அழித்து
இளமை நினைவினை மீட்டுவாள்
சுண்டி இழுக்கும்
ஈரஇரவின் ஒற்றைப் பறையொலியில்
வசமிழந்து போகிறேன்

எப்போதாகிலும் அருந்தலாய்
தன் மகிழ்வைப் பாடும் கணங்களில்
மோனக் கடலின் மெல்லிய அலையொலி
மனதை வருடும்


இன்று
பனிப்புலத்தில் உழலும் வனவாசி நான்
தினமும் அலைகிறேன் 
நினைவுக் கானகத்தில்


துயருறு கனங்களை மீட்டி
எழுகிறது
தாய்க்குருவியின்  பாடல்

வாழ்நாள் முழுவதும்
தன் சந்ததிக்கென்றே உழன்றவள்


பொத்தி வைத்திருக்கமாட்டாளா ?
ஒரு துண்டு சேதி


சிறு பொறி ?

24032011

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..