இலங்கைத்
தேர்தல் ஒன்றின் பின் பாராளுமன்றம்
கைமாறியது. எப்போதும் போலவே புதிதாக வந்தவர்களின்
முதற் காட்சி தொடங்கியது. மீண்டும்
யுத்தநிறுத்தம் ஒன்று சாத்தியமாயிற்று. அன்றைய
நாளில் கொடிய யுத்தத்தினால் இருசாராரும்
களைப்புற்றிருந்தனர். அதை விடவும் மேற்கத்தைய
அரசொன்று சமாதானத் தரகராக வேடம் போட்டிருந்தது.
என்னதான் வலிந்து கட்டி மறுத்தாலும்
கூட நாங்கள் மேற்கத்தையவர்கள் மீது
அதீத நம்பிகையுள்ளவர்கள். அவர்கள் மீது எமக்கு
பற்று அதிகம். ஒருவித மோகத்தில்
விழ்ந்து கிடப்பவர்கள். பக்கி மிக்கவர்கள்.
மேலும்
வல்லரச மேலாதிக்கத்தினால் அன்று உலகே சமனிலையற்றிருந்தது.
அமெரிக்காவின் முழு ஆளுமைக்குள்ளும் திணறிக்கொண்டிருந்தது
உலகம்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற
சொல்லாடல் மூலம் எல்லா நாட்டின்
மீதும் அதன் நெற்றிக் கண்ணின்
அகோர வீச்சு வீழ்ந்தது. இதன்
காரணத்தால் இலங்கையிலும் யுத்த நிறுத்தம் நீண்டிருந்தது.
அல்லது திணிக்கப்பட்டிருந்தது. பொருத்தமாகச் சொல்வதானால் யுத்தநிறுத்தம் என்ற பெயருக்குள் இன்னொரு
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
இருந்தாலும்
மக்கள் சற்று மகிழ்ந்திருந்தனர். அல்லது
அது போலத் தோற்றமளித்தனர். கடைவீதிகள்
கலகலப்பாயிற்று. கோவில்களில் திருவிழாக்கள் எங்கும் சோபனங்கள். ஒருவித
மகிழ்ச்சிப் பேராரவாரத்தில் நாடு திளைத்துக் கொண்டடிருந்தது.
இங்கு நாடு என்று சொல்வது
கூடத் தவறுதான். குறிப்பாக யாழ்ப்பாணம் என்பதே பொருத்தம்.
புகலிட
நாடுகளில் இருந்து ஊர் திரும்பிய
விமானங்கள் எல்லாம் தமிழர்களால் நிரம்பியிருந்தது.
ஆயுதங்கள் தங்கள் கோரப்பற்கள் நிறைந்த
வாய்களின் குருதித் தடத்தை துடைத்து மறைக்க
முனைந்தது. முடியாத நேரங்களிலெல்லாம் வலிந்து
புன்னகைத்ததுக் காட்டின. இருந்த போதிலும் எந்தவொரு
இலங்கை குடிமகனிடமும் இந்த யுத்த நிறுத்தம்
தொடரும் என்பதில் நம்பிக்கையிருக்கவில்லை. அது எப்போதும் உப்பிப்
பெருத்து எக்கணத்திலும் உடைந்துவிடலாம் என்பது போல தோற்றந்
தந்தது. அதனால் எல்லோரிடமும் ஒருவித
அவசரம் இருந்தது. பதட்டம் இருந்தது. அங்கு
வாழுகிற மக்களுக்கு இந்தப் போரின் அல்லது
அரசியலின் ஆழ அகலம் நன்கு
தெரியும். மூன்று தசாப்த அனுபவமல்லவா?
இளந் தலைமுறையினர் போரின் கெடுபிடிக்குள் பிறந்தவர்கள்.
இயல்பு வாழ்வையே அறிந்திராதவர்கள். போருள் வாழ்தலுக்கு இசைவாக்கம்
அடைந்தவர்கள்.
அரச இராணுவத்தின் மீது இவர்களுக்கு ஏப்போதும்
பயமிருந்தது. அவர்கள் தமிழர்களின் பரமவைரி
என்பது இரத்தத்தில் ஆழப்பதிந்த விடையம். சைவ பத்தி இலக்கியங்களில்
வரும் அசுரர்களைப் போல இவர்கள் முன்
இராணுவத்தினர் தோற்றம் கொடுத்தனர். இவர்களின்
உள்ளுணர்விலிருந்து ஏன்னும் மூன்று தலைமுறை
சென்றாலும் இப் படிமத்தை அழிப்பது
கடினமென்றே எண்ணத் தோன்றும்..மறுபுறத்தில்
இயக்க மறவர் மீது பயபக்தி
இருந்தது. சைவக் கோவில்களில் முறைத்த
விழிகளுடன் தோற்றமளிக்கும் கபால வைரவரைப் போல
அல்ல கடவாய் பற்கள் துருத்தியபடி
இரத்த நிறத்தில் குங்குமம் சாத்திய பத்திர காளியைப்
போல இவர்கள் தோற்றமளித்தனர். ஆக்கல்
அழித்தல் எனத் தொடங்கும் ஐந்தொழில்களாலும்
மக்கள் மனதில் இவ்விம்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
ஆரம்பத்தில் விடுதலைக்காளி, இரத்தப்பலி என்கிற பெருங்கதையாடல்கள் மூலம்
இத்தகைய எண்ணப்பாடு மக்களிடம் வளர்க்கப்பட்டிருந்தது. பலரை பலியும் கொடுத்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில்
பய பக்தியுடன் இரு பகுதியிடமிருந்தும் மக்கள்
விலகியே இருந்தனர். அவர்களுக்கு போரின் மீது வெறுப்பிருந்தது.
இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
இவை அனைத்தும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கே பொருந்தும். இதிலிருந்து முற்றிலும் முரணானவர்கள் புகலிட பெருங்குடி மக்கள்.
மயிலே மயிலே இறகு போடு
என்றால் போடுமா? அடித்துத்தான் பிடுங்க
வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்
கொள்வார்கள். தங்களிடம் பிடுங்கப் படுகிற பணத்திற்கு அங்கு
வேலை நடக்க வேண்டும் என்பதில்
அவர்கள் கருத்தாயிருப்பவர்கள். தங்களது வேலை நேர
இடைவெளியில் அல்லது வானலைகளின் நிகளும்
நெடுத்த உரையாடல் நேரத்தில் பொழுது போக்குவதற்கு அவர்களுக்கு
விடையம் வேண்டுமல்லவா? அதைவிடவும் போரைவைத்துப் பிழைப்பு நடத்துகிற தொழில், புகலிட நாடுகளில்
செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்தது. எண்ணுக் கணக்கில்லாத பத்திரிகைகள்,
தொலைக்காட்சி வானொலிகள் என வயிற்றுப்பிழைப்புக்கு பஞ்சமில்லை. அவர்களும்
கூட விரைவில் ஒரு போர் தொடங்கும்
என்பது போன்ற ஊகங்களை வளர்ப்பதிலேயே
கருத்தாயிருந்தனர்.
ஊருக்கு
விடுப்பில் போனவர்கள் விடுப்புப் பார்க்கப் போனவர்களாகவே இருந்தனர். போரின் துயர் அவர்களைப்
பெரிதும் பாதிக்கவில்லை.
இத்தைகைய
சூழலில்தான் என் கடற்கோள் கவிதை
பிறந்தது.
வாழ்நாளில்
கடற்கோளைப் பார்த்தவன் அல்ல. கடலுக்கு போனவர்கள்
காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்த
காலத்தில் கடல் எழுந்து ஊருக்குள்
வந்தது இல்லை.
அறுபதாயிரம்
உயிர்கள் வரையில் காவு கொண்ட
யுத்தத்தின் படிமமாக என் கண்
முன் கடலே தோன்றியது. எந்தவித
சிரமமும் இல்லாது முற்றிப் பழுத்த
இலையொன்று மரத்திலிருந்து இறங்குவது போல மிக இயல்பாகவே
இறங்கியது இக் கவிதை. செப்டெம்பர்
27- 2002 எழுதப்பட்ட கடற்கோள் கவிதை என் அஃதே
இரவு அஃதே பகல் கவிதைத்
திரட்டில் பதிவாகியிருக்கிறது.
இதற்குப்பின்
இரண்டாண்டுகள் கழித்து இன்று உண்மையிலே
பெரும் கடற்கோள் தோன்றியதும் பல்லாயிரக் கணக்கான உயிர்களை ஒரு
நொடியில் காவு கொடுத்ததையும் பார்க்கும்
போது மனம் துயரத்தில் விம்முகிறது.
இக் கடற்;கோளின் வியாபகத்தை
அதன் கொடுரத்தை, அழிவை, அலை அள்ளிக்
கொண்டு சென்ற எம்மவர் வாழ்வைச்
சொல்வதற்கு வேறு படிமம் தோன்றுமா?
தெரியவில்லை .
இந்த அனர்த்தத்திற்கான நேரடிக் கவிதையாகவே (படிமம்
அற்று) இக்கவிதை பேசுகிறது
கடற்கோள்
ஊமை அமுக்கம் மிரள மிரள விழித்தபடி
பயந்தொடுங்கிய
மிருகத்தின் விழிகளொடு
அடங்கிக்கிடக்கிறது
கடல்
ஒரு பெரிய இரையை விழுங்கி
செரிக்கும்
வரையில் காத்திருக்கும்
மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு
கடலின்
மேற்பரப்பில்
எத்தனை
தடவை விழுங்கிற்று
எம் இனிய குழந்தைகளை?
●
கூடியிருந்த
சிறு மகிழ்வு குலையும்; கடல்
மிருகம் குரலெழும்பும்; பனைஉயர அலையெறியும்; கடல்
எழுந்து நடக்கும்; ஊரெல்லாம் தலை தெறிக்க ஓடும்
திசைகள் பதினாறும் சிதற ஓடுகிற மனிதர்கள்
கதறி வீழக் காற்றெல்லாம் ஒப்பாரிக்
குரலெழும்பும்; எக்காளம் அடங்கும். இரை விழுங்கிக்கடல் மீழும்;
கடல் மீண்ட பின்னாலே மெல்ல
துலங்கும்
ஊர்; மீள…
●
சிறு நாய்குட்டியாகி
நாவால்
நக்கி நனைத்து
சிநேகித்து
வாலாட்டி
மகிழ்கிறது கடல்
கரையெங்கும்
நுரை பொங்க
நுரை கிள்ளி வேடிக்கை பார்க்கின்ற
மனிதரிடை
ஒரு வித அச்சம்
ஒரு விதத் துயரம்
விரக்தி
கடல் மீது அவர் கொண்ட
வெறுப்பு
இருக்கின்ற
துளிப்பொழுதில் வாழ்வை சுகிக்கின்ற
துடிப்பு
சிறு மகிழ்வு
சிக்குண்ட
கூந்தல் காற்றெலாம் சிதைய
மனம் பிசகி அலைகிறாள்
கால்போன
திசையில்
விழி ஏங்கத் தேடுகிறாள்
வெறி கொண்டு
சாபமிட்டு
மண் அள்ளியெறிந்து திட்டி
காறி உமிழ்கிறாள்
கடல்மீது
யார் கவனிப்புமில்லை
உயரக் குரலெடுத்து ஒப்பாரி சொல்லி கதறுகிறாள்
அவளின்
ஒப்பாரிப் பாடலிலிருந்து
வழிகிறது
உலகத்தின்
கண்டங்கள் ஏழிலும்
கடலுக்கு
காவு கொடுத்த
தாய்மாரின்
கண்ணீரும்
கதறலும்
இரை மீட்டுக் கிடக்கிறது கடல்
●●
செப்டம்பர்27
- 2002
(வெளி.காம் இணையதளத்தில் வெளிவந்தது)
No comments:
Post a Comment
உங்களிடமிருந்து..