Wednesday, 5 October 2011

கடல்

ஒரு பொழுதில் ஓவெனக் குழறி அழும்
தன் கரத்தால்
மாரிலே மாறிமாறழ அறையும்

இன்னொரு பொழுதில் கல்லிடை மோதி
களுக் எனச் சிரிக்கும்
முகம் நாணிச் சிவக்கும்

துயரம் கப்பிய நாளொன்றில்
ஓங்காரம் கொண்டு குமுறி வெடிக்கும்
குவலையம் அனைத்தையும் விழுங்கிட விளையும்
பசி கண்ட விலங்கென என எக்காளமிடும்
நடு இரவில் தன் மடியில்
உயிர் பல பிடுங்க
துரோகத்திற்கு துணைபோகும்
ஈழப் பொதுமகன் ஒருவனாய்

மௌனித்திருக்கும்

களைப்புற்ற வேளை
எற்றுண்டு கிடந்த சாதாளைப் பிட்டியிலே
தலைசாய்த்துத் தூங்கும்

மெல்லச் கிணுங்கி விம்மி வெடித்து
இயலாத போதெல்லாம் எழுதும் சோகத்தை
கரையெல்லாம் நுரைசிந்த

பிணங்களை சுமந்து வந்து
கiயிலே வைத்து
கைகட்டி நின்று கண்ணீர் வடிக்கும்

எப்போது கரையுடைக்கும்
என அறியாக் கவிஞனாய்
மோனத் திரையுள்
கட்டுண்டு கிடக்கும்

எனக்குள் ஒரு பெரும் கடல்



இலையுதிர்காலம் 2001
('அஃதே இரவு அஃதே பகல்' திரட்டிலிருந்து)
)

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..