Monday, 10 October 2011

பழி



விடியக்காலமையே கிளம்பிவிட்டான் சூரியன். கடந்த இரண்டு நாளாய் இவன்ரை தலைக்கறுப்பையே காணயில்லை.

வேட்டைநாயைப் போலை வெய்யில் நாக்கை தொங்கப் போட்டபடி அலைஞ்சுது.  பிறகு மழை. பட்ட காலிலைதான் படும் எண்டது போலை ஊரைவிட்டு துரத்தப்பட்ட சனங்களை பின்னாலை நிண்டு நல்ல துவரந்தடியாலை அடிச்சடிச்சு, மாட்டைக் கலைக்கிறது போலை ….  

பாட்டம் பாட்டமாய் அடிச்சடிச்சுப் பெஞ்சுது.

திரும்ப, இண்டைக்கு எண்டால் நரகாலி வெய்யில். வந்ததும் வராததுமாய் அலையுது.  ஒரு இடம் மிச்சம் விடாமல் மோந்து மோந்து திரியுது. சனமெல்லாம் போட்டுதோ இல்லாட்டி இன்னமும் மிச்சமீதி இருக்குதோ எண்டு கணக்கெடுக்குமாப் போலை

கண்டறியாத சனியன் பிடிச்ச வெய்யில்

வாயுக்குள் திட்டினபடி சைக்கிலை உன்னி மிதிச்சான் மயன். அவன்ரை முழுப்பெயர் மாயவன். எல்லாரும் அவனை மயன் எண்டு, இல்லாட்டி மகி எண்டுதான் கூப்பிடுகிறவை. இப்ப அவனுக்கு பெயர் பற்றி விளக்கம் சொல்ல நேரமில்லை.  அவசரம்.  எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு கெதியிலை வீட்டை போய் திரும்பிவிட வேணும் என்கிற அவசரம்.

ரோட்டெல்லாம் ஒரே சேறும் சகதியுமாய் கிடக்கு. ரோட்டெண்டு சொன்னாப்போலை தார்போட்ட ரோட்டில்லை. அது முந்தியொரு காலம். இப்ப எல்லாம் குண்டும் குழியுமாப் போச்சு.  பத்தாததுக்கு சனம் தூக்கேலாமல் போட்டிட்டுப் போன மூட்டை முடிச்சுகளும், சில்லறைச் சாமானுகளும், வார் அறுந்து போன செருப்புகளும் இறைஞ்சுபோய்க் கிடக்கு. கடைசியில் போனவர்கள் யாரோ ஒதுக்கி ஒதுக்கி விட, சில இடங்களிலை தொட்டந்தொட்டமாய் குவிஞ்சு கிடக்கு.

சைக்கில் முன் சில்லு ஒரு செருப்பிலை இடறுண்டு முன்னாலை கிடந்த கிடங்கிலை விழுந்து நிமிந்திச்சு.

‘’பூழலில் செருப்பு….  செருப்பு போட்டுக் கொண்டு வெளிக்கிட்டிட்டுதுகள்நாயள்பொடியள் வெளிக்கிடச் சொன்னால் வெளிக்கிட வேண்டியதுதானேபிறகென்னத்துக்கு செருப்பும் மசிரும் மண்ணாங்கட்டியும்…’’

அவனை அறியாமல் வாய் திட்டியது. அவன் எதையும் நினைச்சுக் கதைக்கயில்லை….  அவனுக்கு உண்மை தெரியாமலும்  இல்லை. யுத்தம்,  யுத்தத்துக்கை வாழுகிற போராட்டம் அவனுக்கு. யாழ்ப்பாணத்தானல்லே.... பிறகு சொல்லவே வேணும். அவனவன் சூழலுக்கு ஏற்ற படிதான் இசைவாக்கம் அடைஞ்சிருக்கிறான்,  சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி கதைக்கிறதுக்கும் வாழுறதுக்கும்.

நேற்று மத்தியானம் இவனும் இதே சனத்தோடை சனமாய் ஊரைவிட்டு வெளிக்கிட்டவன்தான். இவன் எண்டு சொன்னாப்போலை மயன் தனியாளில்லை. பெரியகுடும்பம். இவன்ரை அம்மா. மூண்டு தம்பியவை. பத்தாததிற்கு அம்மம்மா கிழவி.  அவள் வருத்தக்காரி வேறை ….

தகப்பன்காரன் பொயிலை சுருட்டு வியாபாரம்... கிளிநொச்சியிலை நிண்டவர். இவனும் தேப்பன் காரனோடைதான் நிண்டவன்...

டேய்மகி,  நிலமை அவ்வளவு நல்லாத் தெரியல்லையடா. ஏதோ நடக்கப் போறது மாதிரி அசுமாத்தம் தெரியிது. ஓருக்கா வீட்டை போய் செலவுக்கு கொஞ்சம் காசு குடுத்துப்போட்டு  எல்லாரையும் பாத்துக் கொண்டு வா…’

தேப்பன்காரன் சொன்னாப்போலை  வெளிக்கிட்டவன். வீட்டை வந்து கால் ஓயவில்லை.  ஒரு நாளுக்குள்ளை நாட்டு நிலமை தலைகீழாய் மாறிப்போச்சு. ஆமி பலாலியிலை இருந்து  ஷெல் குத்திக்கொண்டு வெளிக்கிடத் தொடங்கியிட்டான். அடியென்டா இம்மை மறுமையில்லாத அடி.. மழை கொட்டுறது போலை. ஒண்டுவிழுந்து சத்தம் ஓயுறதுக்கு முன்னாலை மற்றது வெடிக்கும். யாருக்கும் சனத்தைப்பற்றி கவலையில்லை. எல்லாருக்கும் நிலம் பிடிக்கிற ஆசைதான்.

இனி ஒண்டுஞ் செய்யேலாது. எல்லாரும் வீட்டைக் காலி பண்ணிக்கொண்டு  ஊரைவிட்டு வெளிக்கிடுங்கோ என்டு  பெடியள் சொல்லிப் போட்டாங்கள்.. … என்னத்தைக் காலிபண்ணுறது  முடிஞ்ச அளவுக்கு எல்லாரும் வெளிக்கிட்டுதுகள்.   போட்டதுகள்  போட்டபடி கிடக்க  கையிலை அம்பிட்டதை பொறுக்கிக்கொண்டு  செம்மறிப்பட்டியைப் போலை இரவிரவாய் நடந்துதுகள். இடிபட்டு நெருக்குண்டு களைச்சு விழுந்து, போகிற திசையுந் தெரியாது... எங்கை போறம் என்ட இலக்கும் தெரியாது

மயனும்  எல்லாரையும் இழுத்துக் கொண்டு வெளிக்கிட்டான்.  இனித் தொடரேலாது எண்ட நிலை. 
பளை தாண்டினதுக்கு பிறகு எல்லாரையும் ஒரு வீட்டுத் தாழ்வாரத்திலை விட்டுப்போட்டு நிமிர்ந்தான். அப்பதான் தாய்க்காரி சொன்னாள்

‘’தம்பி அம்மம்மாவின்ரை மருந்துப் பொட்டலத்தை காணயில்லை. எடுத்து வைச்சதாய்
எனக்கு ஞாபகத்தையும் காணயில்லை. அவசரத்திலை மறந்து போனன் போலை கிடக்கு. இப்ப என்ன செய்யிறதெண்டு ஒண்டுமாய் விளங்கயில்லை.’’

’’வெளிக்கிடையிக்க  பாக்கவேண்டாம்…. என்னம்மா நீ…. இவ்வளவு தூரம் கஸ்டப்பட்டு அம்மம்மாவை கொண்டுவந்தும் என்ன பிரியோசனம்…. மருந்தில்லையெண்டால்…’’

பேசிப்போட்டு வெளியிலை வந்து கொஞ்சநேரம் வானத்தைப் பாத்துக்கொண்டு நிண்டான்.  ஒரு ஐஞ்சு நிமிசம் வரையில்தான் ஆகியிருக்கும். இருந்தாப்போலை என்ன நினைச்சானோ தெரியாது 

’’சரி சரிநான் போய் எடுத்திட்டுவாறன்…. நீங்கள் கொஞ்சம் அவதானமாய் இருங்கோ ’’

சொல்லிப்போட்டு சைக்கில் கட்டையையும் தள்ளிக் கொண்டு வெளிக்கிட்டிட்டான்.

எட மோனை வந்ததும் வராததுமாய் எங்கையடா போறாய்.  போகாதையடா மோனை. நான் செத்தாலும் பறவாயில்லை. இந்தக் கிழட்டுக்கட்டை கிடந்து என்னத்தை செய்யப்போகுது. உங்களுக்குத்தான் இடைஞ்சல்.  பிரளுவானுகள்பாடையிலை போவானுகள்எந்தப் பத்தேக்கை படுத்துக்கிடப்பானுகளோ தெரியாது. நீ போகதையடா மோனை…”

கிழவி தலையிலையடிச்சு குழறிக்கூடப் பாத்திச்சுது. அவன் காதிலை விழுத்தாத மாதிரி வெளிக்கிட்டுட்டான். கிழவி தொடர்ந்து திட்டிக் கொண்டே கிடந்தது.  தாய்க்காரிக்கு நல்லாய் தெரியும். அவன் சொல்வழி கேளான் எண்ட விசயம்.

சும்மா கிடந்தேன் பிதற்றிறாய். பேசாமல் கிடவேன்.’

அவள் கிழவியைத்தான் அதட்டினாள். மயனுக்கு நல்லாய் தெரியும். ஆமி இன்னும் ’’காம்‘’பை விட்டு வெளிக்கிடயில்லை. இப்ப கண்டபடி ஷெல்தான் குத்திறாங்கள். அதுக்கிடையிலை போய் வந்திடலாம் எண்ட விசையம். எல்லாம் ஒரு விதமான அனுபவந்தான் விருத்தெரிஞ்ச நாளிலை இருந்து போருக்கை வாழ்ந்த அனுபவம்.

இவன் பள்ளிகூடத்துக்கெண்டு திரிஞ்சவன். இவன்ரை தமையன்காரன் இயக்கத்துக்கெண்டு போனவன். பின்னாலை சுட்டாங்களோமுன்னாலை சுட்டாங்களோ…. ஆர் சுட்டாங்களோ தெரியாது இரண்டு கிழமைக்குப் பிறகுதான் சுதன் வந்து சொன்னான். எங்கையோ ஒரு சண்டையிலை செத்துப்போனான் எண்டு. சுதன் எண்டது தமையன்காரன்ரை சினேகிதப் பெடியன். இரண்டு பேரும் சேர்ந்து தான் இயக்கத்துக்கு போனவை.

பதினைஞ்சு நாளாய் தாய்காரி அன்னந்தண்ணியில்லாமல் கிடந்தாள். தேப்பன் அடிச்சுப் போட்ட பாம்பு மாதிரி சுருண்டு போனார். கிழவி தன்னாரவாரம் ஒரே ஒப்பாரி. சின்னனுகளுக்கு ஒண்டும் விளங்கயில்லைஏதோ நடக்கக் கூடாதது நடந்திட்டுது எண்டு மட்டும் தெரியும். ஒவ்வொண்டும் மூலைக்கு மூலை கிடந்ததுகள். கடைக்குட்டி மட்டும் தாயிண்டை மடியுக்கை சுருண்டு போய் கிடந்திச்சு.

மயன்தான் கொஞ்சம் விருத்தெரிஞ்ச பொடியன். வெளிக்கிட்டிட்டான்….  குடும்பப் பாரத்தை நான் சுமக்கிறன் எண்டு வெளிக்கிட்டான்

ஊரிலை சுத்துக் கொட்டிலை போய் சுருட்டு  பொயிலை வாங்கிறது.  சையிக்கில் மிதிச்சு மன்னார் வவுனியா முல்லைத்தீவெண்டு கொண்டு போய் குடுக்கிறது. அங்கை சீனி, பருப்பு, கருவாடு எண்டு கட்டிறது. ஊரிலை கொண்டு வந்து விக்கிறது.  மூண்டு நாலு நாள் பயணம். சிலசமையம் வாரக்கணக்கிலையும் ஆகும். மூண்டு நாலு மூடையை ஒண்டாய்க்கட்டி, சைக்கில் உழக்கி, நோட்டம் பாத்து, கிளாலிக் கடலுக்காலை கொண்டுவந்து சேர்க்கிறதெண்டால் சும்மாவே.

இப்ப மூண்டு வரிசமாய்ப் போச்சு.  தேப்பன்காரனும் வியாபரத்துக்கு நல்ல ஒத்துழைப்பு . இவன்தான் எல்லாத்துக்கும்  மூப்பு. எந்தச் சிக்கலுக்காலையும் சுழிச்சுக் கொண்டு போய் வருவான். இயக்கப் பொடியளும் வலு சினேகிதம். மாவீரக் குடும்பமெண்டு சலுகையள் வேறைஆள் வலு சுழியன்.

விடியக்காலமை.  இளந்தாரி வெய்யில். சுட்டெரிக்கிது. இரன்டு நாளாய் ஆத்தலைஞ்சு திரிஞ்சது. தலை வேறை கிறுகிறுக்கிது. தேயிலை போட்டு வெறும் சுடுதண்ணியைக் குடிச்சுப் போட்டு வந்தது. வயிறு புகையுது.

விடியப்புறம் சத்தம்  கொஞ்சம் ஒய்ஞ்சு கிடந்தது. பழையபடி ஷெல் குத்தத் தொடங்கிவிட்டாங்கள். ஷெல் குத்திற சத்தம், அது பறக்க எடுக்கிற நேரம், விழுந்து வெடிக்கிற சத்தம், திசை, படபடவெண்டு இரண்டு பக்கமும் மாறிமாறிச் சுடுபடுகிற சத்தம் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தான். ஆமி காம்பிலையிருந்து கனதூரம் முன்னேறயில்லை. ஒரு கணம் மனம் வெறுத்துப்போச்சு. அவனறியாது உணர்வு பேசத் தொடங்கிச்சுது

சீ.. எவ்வளவு கஸ்டம். நாய் அலைச்சல். இப்பிடி ஒரு மனிச வாழ்க்கை தேவையாஒரு ஷெல் விழுந்து குடும்பத்தோடை எல்லாரும் மண்டையைப் போட்டாக்கூட பறவாயில்லைப் போலை கிடக்கு.  ஒரு அறிவு வேண்டாம். கண்டபடி ஷெல் குத்தினா ஆர் மிஞ்சிறது. தங்கடை சனமெண்டா இப்பிடி கொல்லுவாங்களோபெடியளுக்குத்தான் அறிவு வேண்டாம். உடனை வெளிக்கிடுங்கோ எண்டு சொன்னால் சனம் குழந்தை குட்டியளோடை எங்கை போகும். பாவங்கள். என்னும் எத்தினை காலத்துக்கு ஆத்தலையப்போறோமோ…’

தனக்குத்தானே அலுத்துக்கொண்டான்.

மண்டைக்குள்ளையிருந்து பெரிய குறவணவன் புழுவொண்டு நோண்டத் தொடங்கியிட்டுது.  சரியாய் ஐஞ்சு வரியத்துக்கு முந்தி மண்டைக்குள்ளை பூந்த புழு.  நினைச்சுப் பாத்தா நேத்து நடந்ததைப் போலைக் கிடக்குசரியாய் இதே மாதந்தான், ஒரு பின்நேரம் போலை  ரோட்டுரோட்டாய் லவுஸ்பீக்கர் கட்டி ஒலிபரப்பத் தொடங்கியிட்டாங்கள்.  இருபத்திநாலு மணித்தியாலத்திலை சோனகர் எல்லாரையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிப் போட்டாங்கள். ஆளுக்கு ஐந்நூறு ரூபா காசு மட்டும் கொண்டு போகலாம்.. வேறை ஒரு சாமானும் கொண்டு போக முடியாது எண்டு கடுமையாய்  சொல்லிப்போட்டாங்கள்..  தமிழ்ச் சனமொண்டும் மூச்சுவிடயில்லை.
அதுகள் எங்கை போகுங்கள். பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த வீடுதொழில்துறை எல்லாத்தையும் விட்டு எப்பிடிப் போகுங்கள்…. இரவிரவாக நித்திரையில்லை….எல்லா வீட்டிலையும் இரவிரவாய் விளக்கு வெளிச்சம் தெரிஞ்சிச்சுது. ஆரும் நித்திரை கொள்ளயில்லை அடுத்த நாள் காலையிலை எல்லாரும் வரிசையிலை நிண்டிச்சுதுகள். சோர்ந்து போய் அழுத முகத்தோடை….. குழந்தை குட்டியள் குஞ்சுகள் குருமான்கள் எல்லாரும்.

ஊரிலை சில சனங்கள் விடுப்புப் பார்க்கப் போயிருந்ததுகள். இவனும் பள்ளிகூடத்தை கட் பண்ணிக்கொண்டு பெடியளோடை பெடியளாய் விடுப்புப் பார்க்கப் போயிருந்தவன். அப்ப இதுவெல்லாம் அவனுக்கு அது ஒரு பெரிய விடயமாய் படயில்லை. அதுதான் போகட்டும்….  பாவங்கள் எண்டுகூட நினைக்கத் தோன்றயில்லை. தனக்கு தனக்கெண்டு வரயிக்கைதான் சுளகு படக்கு படக்கு என்னுமாம்  இப்பதான் அவனைப் புழு அரிச்சரிச்சு நோண்டுது. பழி…. பெரிய பழி….. அரசன் அண்டறுப்பான் தெய்வம் நிண்டறுக்கும் எண்டு சொல்லுவினம். இப்ப எல்லாம் உடனையுடனையே நடக்குது. நாங்கள் செய்த வினையின் வெளிப்பாடுதானோ இதுஎன்கிறது போலை நோண்டுது.

‘இல்லைஇருக்காது

வலிஞ்சுகட்டி மறுக்கிறான்.  எப்பிடியாச்சும் புழுவைப் பிடிச்சு வெளியிலை விட முனையுறான். முடியல்லை. அது மண்டையை குடையுது. பல்லைக்கடிச்சுக் கொண்டு சையிக்கிலை மிதிச்சான். இடையிலை ஒரு பொட்டல் வெளி. றோட்டுக் கரையிலை இருந்து கொஞ்சந் தள்ளி ஐஞ்சாறு பேர் கூட்டமாய் நின்று ஏதோ செய்யினம். திரும்பிப் பாத்தான்.  அவையின்ரை சொந்த அலுவல் மாதிரித் தெரியயில்லை. பாவம். அவைகளுக்கு என்ன அவசரமோ தெரியாது. இவனுக்கு இளகின மனம்.  கொஞ்சம் பதகளிச்சுது.  தன்ரை உடம்புக்கு கொஞ்சம் ஓய்வு தேவை போலையும் இருந்திச்சுது.  சையிக்கிலை அருகிலை நின்ற  பூவரசோடை சாத்தினான். காரியம் நடக்கிற இடத்தைப் பாத்து நடந்தான்.

இரண்டு பேர் கிடங்கு வெட்டுகினம். ஒத்தாசைக்கு இரண்டு மூண்டு சனம் சுத்தி நிக்கிது.  பக்கத்திலை ஏதோ காவோலையாலை மூடிக்கிடக்கு.

இவன் எதுவும் கேக்கயில்லை.

ஆரெண்டு தெரியல்லைத் தம்பி. செத்தபிணம். தனிய வந்திச்சுதோ, ஆரும் கூட்டி வந்தினமோ தெரியாது. இரண்டு நாளாய் அனாதையாய் கிடக்கு. மனிசப் பிணம்.. இப்பிடி விட மனசு கேக்கையில்லை. நாளைக்கு எங்களுக்கும் வரலாம். அதுதான் அடக்கம் பண்ணிறம்….”

இவனைப் பாத்திட்டு இயக்கப் பெடியன் எண்டு நினைச்சோ என்னவோ, ஒரு செய்யக்கூடாத காரியத்தை செய்யிறமாதிரிப் பயந்த மனநிலையிலை  ஒரு கிழவன் சொல்லி முடிச்சுது.

இவன் ஓலையை தூக்கி பிரேதத்தை பாத்தான் அடையாளந் தெரியல்லை. கொஞ்சம் உப்பிப் போச்சு. சாதுவாய் மணமும் வரத் தொங்கியிட்டுது. காவோலையால் மெல்ல மூடினான். தானும் கொஞ்ச நேரம் நிண்டு அவையளுக்கு உதவவேணும் போலை மனசு சொல்லிச்சிது.
நேரத்தைப் பாத்தான். நிக்கிறதுக்கு சரிப்பட்டு வராது. இடத்தை விட்டு நைசாய் கழன்டான். சயிக்கிலை எடுத்து மிதிக்கத் தொடங்கினான்.

ஒரு முக்கால் மணி நேரத்தை தாண்டியிருக்கும். இப்ப  வெடிச்சத்தங்கள் கொஞ்சம் தெளிவாய் கேட்கிது. பக்கத்திலை விழுகிறது போலையும் பிரமை. வடக்கு பக்கமாய் காதைக்குடுத்து அவதானிச்சான். சத்தங்கேட்கிற துரத்தை அனுமானிக்க முடிஞ்சுது.

கே.கே.எஸ் றோட்டை ஊடறுத்துத்தான் போகவேணும். றோட்டிலை மருந்துக்கு கூட ஓரு சனமும்  கிடையாது. அது சுடலை வெளியைப் போலை நீண்டுகிடந்திச்சு. மனசு பக்பக் எண்டு அடிக்கத் தொடங்கியிட்டுது. மேலாலை ஷெல் கூவிக் கொண்டு போகுது. டவுன் பக்கமாய் ஆள்காட்டிக் ஹெலி ஒண்டு வட்டம் போடுது. ஒழுங்கையிலை சைக்கிலை விட்டான்.

“ஐயோஐயோ…”

இருந்தாப்போலை எங்கையோ ஒரு மனுசக் குரலொண்டு அவலமாய் கேக்குது. பிரமையோநம்பமுடியல்லை.  சயிக்கிலை நிறுத்தி காதைக் குடுத்து கேட்டான். சத்தம் இல்லை. வெறும் பிரமைதான் எண்டு நினைச்சு மனதை திடப்படுத்திக் கொண்டு சைக்கிலிலை ஏற  திரும்பவும் சத்தம்.

ஐயோஐயோஆராவது காப்பாத்துங்கோ…’

பேசாமல் போவெண்டு மனசு சொல்லிச்சு. இவன் கேக்கயில்லை. சயிக்கிலை வேலியோடை சாத்தினான். சத்தம் வந்த திசையிலை நடந்தான். ஒரு பழைய நால்ச்சார்வீடு. கதவெல்லாம் திறந்தபடி கிடக்கு. உள்ளுக்கை கால் வைக்கவும் தயக்கமாயிருந்திச்சு.

சத்தம் எங்கையிருந்து வருகிதெண்டு அனுமானிக்க முடியல்லை. வீட்டுக்கை நுளைஞ்சான். கண்மூடித் திறக்கிறதுக்கிடையிலை எல்லாப்பக்கமும் பாத்தாச்சு. யாரும் இல்லை. அப்ப சத்தம் எங்கையிருந்து வருகிது. வீட்டுக் கோடிப்பக்கம் போனான். தாழ்வாரத்தோடை சேர்த்து ஓரு பங்கர். பனங் கொட்டுகளாலை மூடி மேலை மண் மூடை அடுக்கிக் கிடக்கு. இறங்கிற படியெல்லாம் மழையீரம். அவசரத்தில வழுக்கி விழப் பாத்திட்டான். தன்னை சுதாகரிச்சுக் கொண்டு கீழை போனான்.

கிழவன்….

கிழவனுக்கு பக்கவாதம்.  மழை ஈரத்துக்கு புற்றெடுத்து  பூத்து சிலிர்த்துக்போய் கிடக்கு நெருப்பெறும்பு.  கிழவனை ஈச்சுப் பிடிச்சுக் கடிக்கிது. கிழவன் வலிதாங்காமல் துடிக்கிது. தன்ரை இடக்கையாலை விறாண்டி விறாண்டி…. விறாண்டின இடமெல்லாம் இரத்தம் கசியுது.
இவனுக்கு இப்ப எதைப்பற்றியும் யோசினை இல்லை. முதல் வேலையாய் கிழவனை வெளியிலை கொண்டு வந்தான். தூக்கிக் கொண்டு போய் கிணத்து மிதியிலை இருத்தினான். துலாவைத் தாட்டு நாலு வாளி தண்ணி அள்ளி வார்த்தான்.

வீட்டுக்கை தூக்கி கொண்டு போய் கட்டிலிலை கிடத்தி துவாய் துண்டாலை துடைச்சான்.
கொஞ்சம் எண்ணை பூசினால் வேதனை குறையும் எண்டு நினைச்சிருப்பான் போலை.. குசினிப்பக்கம் போனான். அடுப்படி புகைக்கூட்டிலை இரண்டு மூண்டு போத்தல் அடுக்கிக் கிடக்கு.
மணந்து பார்த்து நல்லெண்ணைப் போத்திலை எடுத்தான். முடிஞ்சளவுக்கு உடம்பெல்லாம் பூசினான்.  கிழவன் தன்றை இடக்கையாலை வலக்கையைத் தூக்கி கும்பிடுகிது. கண்ணிலை கண்ணீர் ஆறாய்ப் பெருகிது…. தன்ரை கோணல் வாயாலை தெத்திதெத்தி எதோ சொல்லமுனையுது…. இவனுக்கு விளங்கிகொள்ள முடியல்லை. தெரிஞ்சுகொள்ளறதுக்கு இவனுக்கு பொறுமையும் இல்லை. விட்டிட்டுப் போகவும் மனசில்லை. ஆரோடை இருக்கிறியள். எங்கை எல்லாரும். திருப்பித் திருப்பிக் கேட்கிறான்.

....ள்…… மகள் வரு..வா..ள்”

இது மட்டுந்தான் அவனுக்கு விளங்கினது. இவனுக்கு அவையள் மேலை கோவம் கோவமாய் வந்திச்சுதுதூசனத்தாலை பேச வேணும் போலை கிடக்கு….

வெளியிலை வந்தான். மனசு கேட்கயில்லைகாரணமில்லாமல் திரும்பவும் உள்ளுக்கை போனான். கிழவன் கையெடுத்துக் கும்பிடுகிது.

திடீரெண்டு ஒரு ஷெல்எங்கையோ கிட்டவிழுந்து வெடிச்சிருக்க வேணும். வீடு கோப்புசத்தோடை விழுமாப்போலை அதிருது. கொஞ்சம் பயந்திட்டான். பட்டெண்டு வெளியிலை வந்தான். கிட்டடியிலை ஒரு மோட்டார் சயிக்கில் சத்தம் கேட்கிது. படலையை திறந்து வெளியிலை ஓடிவந்தான்

சுதன் தான்.  நல்லதாய் போச்சு. அவன் நினைக்கிறதுக்கு இடையிலை சுதன் கிட்ட வந்திட்டான்.

டேய் மயன்….. என்னடா  நீ…  நீ ஏன் இதிலை நிக்கிறாய்

’ஒரு அவசரம் மச்சான்…. நீ வந்தது நல்லதாய் போச்சு…. ஒருக்கால். வந்திட்டுப் போ.’

மோட்டார்ச் சயிக்கிலை மறைவு பார்த்து மரத்துக்கு கீழை விட்டான். தோளிலை கிடந்த. கே”ஐ கைக்கு மாத்திக் கொண்டான். மயனுக்குப் பின்னாலை நடந்தான்.

கிழவனை பார்த்தவுடனை சுதனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

ஆரடா இது கிழடு.’

தெரியாது. ஆனா ஏதாவது செய்யோணும். பாவம் கிழவன்.’ 

உனக்கென்ன விசரே….  இந்த நேரம் தேவையில்லாத சோலி பாத்துக் கொண்டு நிக்கிறாய். நான் போகோணும்விடு.’

மயன் பாதையை வழிமறிச்சு நிண்டான். சுதனுக்கு மறுக்க முடியல்லை. வேற ஆருமெண்டா அவனுக்கும் மறிக்கிற துணிவு வந்திருக்காது. சுதனும் வெடி வைச்சிட்டுப் போயிருப்பான். ’அண்ணன்காரனை நான்தான் இயக்கதிலை கொண்டுபோய் சேர்த்து அவன் அநியாயமாய் செத்துப்போனான்எண்டொரு உறுத்தல் எப்பவும் சுதன்ரை மனசுக்கை  குடைஞ்சு கொண்டு கிடக்குது.

சரி இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.’

“எங்கையாவது கொணடுபோய் விடு.. நான் தூக்கி பின் சீற்றிலை ஏத்தி விடுறன்

என்ன கதை கதைக்கிறாய்…. சும்மா விசர் கதை கதைக்காதை. நடக்கிற காரியமாய் கதை.’
மயன் கொஞ்சம் உணர்ச்சிவசப் படுகிற சுபாவம் கொண்டவன். முற்கோபி. ஆரோடை என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் கதைச்சுப் போடுவான்.

டேய்உன்ரை கொப்பர் எண்டா விட்டிட்டுப் போவியா….’

மயன் இப்பிடிக் கேப்பான் எண்டு சுதன் கனாவிலையும் எதிர்பார்த்திருக்கையில்லை. பிடரியிலை யாரோ அறைஞ்சது போலை வலிச்சுது. அவன் தன்ரை குடும்பம் பற்றின நினைவே இல்லாமல் இருந்தவன். இப்ப அதுகள் எங்கை ஆத்தலையுதுகளோ…..

ஒரு கணந்தான். சுதன் தன்னை சுதாகரிச்சுக் கொண்டான்.

சரிசரி…. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.”

கிழவனை எங்கையாவது கொண்டுபோய் விட்டிட்டு போ.’

முடியாதடாசொன்னால் கேள்! இதுக்குள்ளை நான் எங்கை கொண்டு போறதுஎங்கை விடுகிறது.’

சுதனின் குரல் உடைஞ்சு கெஞ்சல் தொனிப்புடன் வந்திச்சு. மயனுக்கு எப்பிடித் தான் சொல்லத் துணிவுவந்ததோ தெரியாது. டக்கெண்டு சொன்னான்

சரி அப்பிடியென்டால்தட்டியிட்டுப் போ…”

சுதன் திகைச்சுப் போனான்.

என்ன கிழவனை கொல்லச் சொல்லுறியா…. உனக்கு என்ன நடந்தது. ஏதாவது யோசிச்சு கதை. சும்மா விசரைக் கிளப்பாதை….  வயசுபோன கிழவன்…. பாவமடா.’

அதாலைதான் சொல்லுறன் தட்டியிட்டுப் போவெண்டு

இப்ப மயன்ரை குரலிலை உறுதி இருந்தது. இவன் உண்மையாத்தான் சொல்லுறான் எண்டது சுதனுக்குப் புரிஞ்சு போச்சு. அவனுக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியல்லை.
ஒரு நிமிசம் கூடத் தாமதிக்கயில்லை. மயன் திரும்பவும் மௌனத்தை உடைச்சான்.

இனி ஆரும் வந்து கிழவனைக் கொண்டுபோகப் போறதில்லை. கிழவன் பசியிலையும் பயத்திலையும் கிடந்து அழுந்தி அழுந்திச் சாகப் போகுது. பார்உடம்பெல்லாம்  எறும்பு கடிச்சு கிழவன் விறாண்டி விறாண்டி இரத்தம் கொட்டுறதை  பாவம் வலியிலை துடிக்கிகுது. இதைவிடக் கொல்லிறது ஒண்டும் பாவமில்லை. அது தருமம்…’

இல்லைநான் கொல்ல மாட்டன்…. என்னாலை முடியாது.’

ஏன்…. நீ ஓருத்தனையும் கொண்டதே இல்லையா…..’

சுதன் ஒரு கணம் நிலைகுலைஞ்சு போனான். அவனுக்கையே அந்தக் கேள்வி இரைஞ்சு கொண்டு கிடந்திச்சு. அவன் நீண்ட காலமாயே வீட்டை விட்டு வெளிக்கிட்டு இயக்கக்தோடை திரிஞ்சவன். அனேகமான சண்டையள்ளை முன்னுக்கு நிண்டிருக்கிறான். எல்லாதையும் விட இந்தியன் ஆமிக் காலத்திலை கனபேரைபோட்டுத்தள்ளியிருக்கிறான். அவன் பத்து வார்த்தை கதைச்சால் நாலு வார்த்தையாவதுபோட்டுத்தள்ளிப் போடுவன்’ என்றுதான் இருக்கும்.

டேய்…. டேய்சும்மா கதைச்சுக் கொண்டிராதைபோட்டுத்தள்ளிப் போட்டு போயிடுவன்.’

‘அதைத்தான் நானும் செய்யச் சொல்லிறன்.’

சுதன் வாயடைச்சுப்போனான். அவனுக்கு என்ன செய்யிறதெண்டும் தெரியல்லை. எப்பிடிப் புரியவைக்கிதெண்டும் தெரியல்லை.

டேய்.. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்….  நான் கொலை செய்திருக்கிறன் தான். இல்லையெண்டு சொல்லயில்லை. அதெல்லாம்தலைமையிரை ஓடர்நான் வெறும் கருவிதான்…. அதிலை எந்தப் பாவமும் எனக்கில்லை. எப்பவும் என்னை மனசாட்சி உறுத்தினது கிடையாது…..’

உறுத்தினது கிடையாதுஎண்டு சொல்லைக்கை தான் நெஞ்சிலை முக்கிழுவை முள்ளு குத்தினது போலை வலி….தலை கிறுகிறுத்துது. அந்த சம்பவம்…. அது மண்டையை குடைஞ்சு கொண்டிருந்தது. கன நாளாய் நித்திரையில்லாமல் அலைஞ்கிருக்கிறான். ஒருக்கா இந்தத் தொழிலை விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு  ஓடுவமோ எண்டு கூட நினைச்சதுண்டு…. முடியல்லைஅவனாலை மீண்டு வெளியிலை வர முடியல்லை.

அது நடந்து இப்ப பத்து வரிசத்துக்கு கிட்டவாச்சுகாலம் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டுது.  சண்டையின்ரை உக்கிரத்திலை நேற்று நடந்ததைக் கூட இண்டைக்கு ஞாபகப்படுத்த சிரமப்பட வேண்டியிருக்கு. ஆனால் அதே காலம் தேவை வரயிக்கை எல்லாத்தையும் தானாயே கொண்டுவந்து மூடையை முன்னாலை போட்டு முடிச்சை அவிழ்க்கிது. எலுமிச்சங்காய் போலை நினைவுகள் உருண்டோடுது.


மிழ் மன்னர்கள்  காலத்து தாயாதி சண்டைகளின் தொடர்ச்சியைப் போல சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்க வெறியில் இவர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்தது.

இரண்டு நாட்களுக்கு முதல் மாற்றுக் குழுவைச் சேர்ந்த இரண்டு பேரை பிடித்திருந்தனர்….  தட்டுறது எண்டது முதலே முடிவானது தான். விசாரணை எண்டு சொல்லி கட்டுக்கதைகளை பரவவிட்டு சனங்களிடத்திலை  தங்களை நியாயவான்களாக சித்தரிப்பதென்பது இரண்டாவது. ஒரு கல்லிலை இரண்டு மாங்காய்.  அதனாலைதான் இந்த இரண்டு நாள் அவகாசம்.

அதுவொரு பிரபலமான சந்தி.  சனநடமாட்டம் உள்ள இடம். அங்கே வைத்துத் தான் இரண்டு பேரையும் தட்டிறதெண்டு பிளான். ’இண்டைக்கு இன்ன இடத்திலை வைச்சு இரண்டை போடப்போறம் எண்ட கதை கூட வெளியிலை சில வாலுகளுக்கு கசிஞ்சிட்டுது. இதாலை விடுப்புப் பாக்க எடுபிடியளும் சயிக்கில்லை சந்தியை வட்டம் போட்டுக் கொண்டு திரிஞ்சுதுகள்.

மத்தியானம். இரண்டு மணியிருக்கும். இரண்டு பேரையும் வானிலை கொண்டு வந்திச்சினம்.
ஒருத்தன் கிழக்கு மாகாணம். மற்றவன் சுதன்ரை பாலிய நண்பன்  சின்னனிலை ஒண்டாய் படிச்சு நீண்டகாலமாய் ஒண்டாய்த் திரிஞ்சவை. இரண்டுபேரும் சேர்ந்து செய்யாத திருகுதாளம் கிடையாது. இருந்தாப் போலை ஒரு சனிக்கிழமை. அவனைக் காணயில்லை எண்டு தாய் தேப்பன் அழுது குளறிச்சினம். ஊரிலே உள்ள அவன்ரை சினேகிதப் பொடியள் எல்லாரையும் விசாரிச்சினம். ஏதோ இயக்கத்துக்கு போட்டான் எண்டு சாடைமாடையாய் கதை வரத் தொடங்கிச்சுது.  உனக்கு சொல்லாமல் போயிருக்க மாட்டான்எண்டுசொல்லி சுதனையும் வந்து விசாரிச்சினம். அவன் போனது உண்மையிலை அவனுக்கு தெரியாது.

இது நடந்து ஒரு நாலு மாசத்திற்குப் பிறகுதான் சுதன் இயக்கத்திற்குப் போனவன். பிறகு ஒருவரை ஒருவர் சந்திச்சதே இல்லை.

இவ்வளவு காலங்கழிச்சு இப்பிடி ஒரு சூழல்லை சந்திக்க வேண்டியதாய் போச்சு. திடீரெண்டு ஓடர் வந்திச்சிது. தன்ரை குறூப்போடை இவனும்  வெளிக்கிட்டிட்டான்.  வேனிலை ஏற்றியபோது கூட  இண்டைக்கு போடப்போறதிலை ஒருத்தன் தன்ரை பழைய நண்பனாய் இருப்பான் எண்டு சுதன் நினைச்சிருக்கயில்லை.  அவனைக்கண்டதும் முகம் கறுத்துப்போச்சு. தனக்கு தெரியாதவன் போல நடிச்சுக் கொண்டு இருந்திட்டான். வரயிக்கை எல்லாரும் சிரிச்சு கதைச்சுக் கொண்டுதான் வந்தாங்கள்.  சுதன் மட்டும் கதைக்கயில்லை.  பேயறைஞ்சவன் மாதிரி இருந்தான்.

சந்திலை உள்ள தேத்தண்ணிக் கடையுக்கை கொண்டுவந்து விட்டு விரும்பினதை எழுத்து சாப்பிடுங்கோ எண்டாங்கள்..   தங்கடை கதை முடியப் போற விசையம் இரண்டு பேருக்கும் தெரிஞ்சிட்டுது. கிடைச்ச இடைவெளியிக்கை தப்பி ஓட தொடங்கினான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன். கடையைவிட்டு வெளியிலை வந்து ரோட்டிலை இறங்க வெடி விழுந்திச்சு. சுருண்டு விழுந்தான். அவன்ரை கதை சரி.

மற்றவனை கூட்டிக் கொண்டு சந்திக்கு வந்தாங்கள்.  எல்லாரும் சுத்தவர துவக்கோடை நிக்கிறாங்கள். அவன் நடுவிலை. உயிருக்கு மன்றாடுறான். ஓவ்வொருதராய் கெஞ்சிறான். ஒருதனுக்கொருதன் கிண்டல் பண்ணி சிரிகிறான்கள். எல்லாற்றை கையிலை இருந்த ஏக்கேயும் லோட்பண்ணிக் கிடக்கு. ஆற்றையிலை இருந்து புகை வருமெண்டது தெரியாது.
சுதனுக்கு என்ன செய்யிறதெண்டே தெரியல்லை. அவன் கெஞ்சிறதை பார்க்க அவனுக்கு பொறுக்கையில்லை. அவனோடை சேர்ந்து ஒண்டாய் ஒரு சைக்கில்லை திரிஞ்சதுதிண்டது பேண்டது எல்லாம் தலையை குடைஞ்சுது. அவனைப்பார்க்க பாவமாய் இருந்திச்சு. எப்பிடி முடிவெடுத்தான் எண்டது யாருக்கும் தெரியாது. சுதன் நினைக்கு முன்னரே அவன் விரல்கள் இயங்கி விட்டது

இரண்டு சத்தம் தான்….  சுருண்டு விழுந்தான்.

சுதன் கண்களை இறுக மூடி தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தான். அஞ்சலி செலுத்துவதைப் போல இருந்தது. யாருடனும் பேசவில்லை. திரும்பி நடந்தான் வேனை நோக்கி….


ஹெலி ஒண்டு மேலாலை கடந்து போகுது. ஏதும் அசுகை தெரிஞ்சால் வட்டம் போடத் தொடங்கியிடும். சுதன் ஒரு கணம் கண்ணை முடினான்.

அவன் முடிவெடுத்துவிட்டான் என்பது மயனுக்குத் தெரியும். யோசிக்காதை. பாவமும் புண்ணியமும் எனக்கு வரட்டும். தைரியம் சொன்னான்

எப்படி நடந்ததென்பது தெரியாது. இயந்திரம் மாதிரி உள்ளுக்கை போனான்.

ஒரு சத்தந்தான்!

அறைக்குள்ளை எண்டதாலை அடைச்ச குரலிலை உறுமிப் போட்டு அடங்கிச்சுது.

வெளியிலை வந்தான். மயனோடு கூட பேசவில்லை.  அவன் மேலை கொஞ்சம் கோபம் இருந்தது போலை தெரிஞ்சுது. அவன்ரை பார்வையிலை ஒருவிதமான வெறுமை இருந்திச்சு.
மோட்டச்சயிக்கிலை எடுத்து மிதிச்சான்.  உறுமிச்சுது.

மயனும் எதுவும் பேசயில்லை. தன்ரை வீட்டுப்பக்கமாய் சைக்கிலை மிதிச்சான்.

சுதனின் மோட்டச்சையிக்கில் ஒரு நூறு யார் சென்றிருக்காது. இரண்டு சையிக்கில்கள் எதிரே வந்தது.  மூண்டுபேர். முன்னால் வந்த சயிக்கிலின்ரை பின் கரியரில் ஒரு பொம்பிளை.  பின்னால் வந்த சையிக்கிலின் பின் பக்கம் ஆரும் இல்லை. ஆனால் கரியரில் ஒரு கதிரை கட்டிக்கிடக்கு. அதுவும் நிமிர்த்திவைச்சு…. ஒராளை இருத்திறதுக்கு வசதியாய்.

’இதுகள் இந்த நேரம் பாத்து எங்கை போகுதுகள்.’ சுதனுக்கு விளங்கயில்லை..

ஆமி ஷெல் அடச்சுக் கொண்டு வாறான். உந்தப் பக்கமாய்   எங்கை போறியள்?....’

தோளிலை கிடக்கிற துவக்கை கண்டதும் சையிக்கில் மிதிச்ச ஆம்பிளையள் இரண்டு பேருக்கும்  பதில் சொல்லுற துணிவில்லை…. பின்னால் இருந்த பொம்பிளைதான் பயந்தபடி வாயைத்திறந்து சொல்லிச்சுது.

நாங்கள் ஓடயிக்கை அப்பாவை விட்டிட்டுப்போட்டோம். அவருக்கு நடக்கேலாது. பாரிசவாதம்கூட்டிக்கொண்டு போக ஆள் கிடைக்கயில்லை…. இப்பதான் கூலிக்கு ஆட்களை ஒழுங்கு பண்ணி கூட்டியாறன்…...’
●●●

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..