Sunday, 16 October 2011

கல்வெட்டுகள்



கடைசிக் கெடு கிடைச்சாச்சு.

எப்படியும் இன்டைக்கு எழுதிக்கொடுத்துவிட வேணும். இல்லாவிடில் அடுத்த சஞ்சிகைக்கு பிந்திப்போய்விடும்.    ம்....     மண்டை இடிக்குது. நேற்று அடிச்ச பியரின் போதை இன்னும் இறங்கயில்லை. இரவு எப்பிடி வீட்டை வந்தனான்
நேத்து இராத்திரி நடந்ததை இப்ப இவன் நினைச்சு நினைச்சுப் பாக்கிறான். 
தொடக்கத்திலை கதைச்சதுகள் மட்டும் கொஞ்சம் கொஞ்சம்  நினைவிலை இருக்கு. மீதி? எப்படி வீட்டை வந்தான்.  எந்த நினைவையும் அவனால் அசைபோட முடியவில்லை

இலங்கையின் போருக்குள் தப்பி புலம் பெயர்ந்து ஒரு பத்தாண்டுகளைக் கடந்தாயிற்று. பாரீஸ் நகரின் மத்தியில் புறாக் கூன்டு போன்ற மிகவும் சிறிய அறையில் அவன் வாழ்க்கை ஒடுகிறது.  ஒரு சிறு மேசை. அருகே படுக்கை. அதனோடு கூடிய சிறு சமையல் பகுதி. அன்றாட தேவைக்குரிய பொருட்கள். இவ்வவு தான் அவன் சொத்து.   இந்த நிமிசத்தில நினைத்தாலும்  ஒரு பொதியோடு வீடு மாறிவிட முடியும்.

இப்ப இந்தக் கணத்திலைஅவன்ரை பிரச்சனை  இது ஒன்றுதான். எப்பிடியும் இண்டைக்கு எழுதத் தொடங்கவேனும்.

தனது எழுதும் மேசையை திரும்பிப் பாக்கிறான். வாரப் பத்திரிகைகள், ஓசிப் பத்திகைகள்,  இலக்கியச் சஞ்சிகைகள், எழுதி எழுதிப் கிழிச்சுப்போட்ட கடுதாசிக் குப்பையள் என்டு எல்லாம் இறைஞ்சு கிடக்குது. எல்லாத்தையும் ஓழுங்காய் அடுக்கிவைக்க வேனுமெண்டு விருப்பந்தான். இருந்தாலும் அவனுக்கெங்கை நேரம்.

என்ன மேசை இப்பிடி குப்பையாய் கிடக்குது. கொஞ்சம் அடுக்கி வைக்கக் கூடாதோ

வீட்டுக்கு வாறவை யாரும் கேட்டால் போதும். ஒரு நீண்ட தத்துவ விளக்கம் கிடைக்கும். ஒழுங்கை மீறுவது எண்டதே என்ட இயல்பு. பின் நவீனத்துவ சித்தாந்தம் என்ன சொல்லுது தெரியுமோ  என்டு தொடங்குவான் தன்றை பிரசங்கத்தை.   வாயைக் கொடுத்தவைக்கு போதும்போதும் என்டாகிவிடும்.
இப்ப நடக்கிற சமகாலத்திலை இவன் உலகறிஞ்ச எழுத்தாளன். புலம்பெயந்த இலக்கியத்திலை  வலு விண்ணன் என்டு சொல்லுகினம்.  இவன்ரை பெயர் படு பிரசித்தம். அது வேற கதை.

இப்ப எழுதப் போறதிலை ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு. இன்டைக்கு எழுதப்போறது சிறுகதையல்ல. சஞ்சிகை ஒன்றிலை வந்த கட்டுரைக்கான எதிர்வினை. அப்படிக் கூடச் சொல்ல முடியாது. அந்தக் கட்டுரையாளனுக்கு கொடுக்கிற  நெத்திஅடி. மரன அடி.

இதோடை சரி. இனி அவன் பேனா தூக்கக் கூடாது. என்னத்தை எழுதிக் கிழிக்கிறான். ஆருக்கு வேனும் இவனின்டை தத்துவ விளக்கம். விசரன். உலகத்தை குளப்புறான். முந்தி ஊரிலையென்டால் என்ன செய்திருப்பன்;; தெரியுமே. இழுத்துக் கொண்டு போய்போஸ்ற்ரிலை  கட்டி மண்டையிலை போட்டிருப்பன். இப்ப இஞ்சை எதுவும்  ஏலாமல் கிடக்கு. ஒண்டும் ஏலாமல் கிடக்கு

அவன்றை கண்ணுகள் இரண்டும் மிளகாய் பழம் போலை சிவத்துக் கிடக்கு. கோவம் நெருப்புப் பொறியாய் பறக்குது. கதிரையை இழுத்துப் போட்டு மேசைக்கு முன்னாலை இருக்கிறான்.

யன்னலாலை வாருகிற சின்னக் காத்திலை பேப்பர் படபடக்குது. பேனையைத் திறந்து அதுகின்டை முனையை வைச்ச கண் வாங்காமல் பாக்கிறான்.
ஓண்டு….. இரன்டு.... மூன்று.... நாலு என நிமிசங்கள் கழியுது. பார்த்த கண் இமை கொட்டாமல் பார்த்தபடியே கிடக்கு.

கண்களை மூடுறான்.
இறுகஇறுக மூடி மனதை ஒருநிலைப் படுத்த முனையிறான் போலை. நேரம் போனதே தெரியல்லை. மூடிய கண்கள் மூடியபடியே கிடக்கு. முகத்திலை மாறிமாறி ரேகைகள் ஓடுது. சிந்தனை ஓடுது. நிஷ்டையிலை லயிச்சிருக்கிற ஒரு பெரிய மகான் போல... நெத்தியிலை வரிவரியாய் சுருக்கம் தெரியுது. முகம் மெல்லமெல்ல இறுகி விகாரமாகுது. ஓரு பயங்கரக் கொலை காரன்றை முகத்தைப் போல.

அவனுக்கு வியர்த்துக் கொட்டுது.

கண்களைத் திறக்கிறான். கோவம் அனல் பறக்குது. இதழ் கோடியிலை ஒரு அசட்டுப் சிரிப்பு. 

இப்ப….  இப்ப எல்லாம் முடிஞ்சுபோச்சு.
எழுதத் தொடங்கிறான். வெகு இயல்பாய். லயம் தவறாத ஒரு குதிரையின்றை நடை போலை எழுத்து ஓடுது.

எல்லாம் பயிற்சிதான்.  சித்திரமும் கைப்பழக்கம் என்பார்களே. அதுபோல எழுத்தும் ஒரு வகையிலை பயிற்சிதானே.

இவன் எத்தினை பயிற்சிகளை தாண்டி வந்தவன் தெரியுமோ. ஓன்றா.... இரன்டா....


அன்றைக்கு அமாவாசை. மையிருட்டு. மேல்காத்திலை பேயிரச்சலிட்டு குமுறுது கடல்.

கண்ணுக்கெட்டிய துரம் வரையிலை இருள்வெளி. தூர இரன்டொரு ஒளிப்பொட்டுகள். நேவிக்காரன்டைகன்போட்டாய் இருக்கலாம்.
திரும்பி தரையைப் பார்க்கிறான். இருள்.  இருளிலை ஒன்டும் தெரியல்லை. சன நடமாட்டமே இல்லாத இடம் போலக்கிடக்கு. வெகு துரத்துக் அப்பாலை வெளிச்சம் தெரியுமாப் போலயிருக்கு. குடிமனையாய் இருக்கலாமெண்டு மனசு சொல்லுது.

இவர்கள் கரையிலை படகை இழுத்து போட்டிட்டு நடக்கத் தொடங்குகினம்.

இவர்கள்  என்டால், ஒன்று இவன். மற்றது இன்னும் மூன்று பேர். இவங்கள் மூன்று பேரும் இவனுக்கு பயிற்சி கொடுக்க பணிக்கப்பட்டவர்கள்
ஏதோவொரு விசேட பயிற்சிக்கென்டு பொறுக்கி எடுத்த பன்ரண்டு பேரிலை இவனும் ஒருத்தன்.
இவர்களுக்கான தொடக்கப் பயிற்சி மற்றும் வகுப்புகள் எல்லாம் ஏற்கனவே முடிஞ்சுது. இது கடசிப் பயிற்சி. இந்தப் பயிற்சி ஒவ்வொருத்தருக்கும் தனியத் தனிய நடக்குமென்டு முன்னமே சொல்லியாச்சு. ஆனால் என்ன மாதிரியான பயிற்சி என்டு மட்டும் இன்னும் தெரியாது.
தூரத்திலை நாய்கள் குரைச்சுக் கேட்குது.  சாதாரன குரைப்பில்லை. எங்கையோ குகையுக்கை இருந்து எதிரொலிச்சு கேட்கிற மாதிரியான அவலக் குரைப்பு. ஒன்றோடை ஒன்று சன்டையிட்டு கடிபடுறது போன்ற அவலத் தொனிப்பு.
முன்னாலை பெரியவன் நடக்கிறான். சத்தம் போடக்கூடாதென்டு சைகை காட்டினவன். அவனுக்குப் பின்னாலை இன்னொருத்தன். இடையிலை இவன். பின்னாலை மற்றவன்.
ஓருவரும் சீருடை அணியவில்லை. மடிச்சு சண்டிக்கட்டு கட்டின சறமும் தொளதொளப்பான அரைக்கை சேட்டும் தான் உடுப்பு.
முன்னாலை போற பெரியவனிட்டை ஒரு சின்னப் பிஸ்டல். மற்ற இரண்டு பேரிட்டையும் .கே. 47 ரகத் துவக்கு. ஒருதன்டை தோளிலை ஒருரோல் மனிலா வடக்கயிறு.


இவனிட்டை ஒரு நீட்டு வாள். நல்ல உருக்கு இரும்பிலை அடிச்சிருக்க வேனும். கெட்டியான வாள். நட்சத்திர வெளிச்சத்திலைபளீச்சென்டு மின்னல் அடிக்குது. தடவிப்பார்த்தான். நல்ல கூர்.  புதுசாய் தீட்டுக்கட்டையிலை  தீட்டியெடுத்திருக்கவேனும்.
இப்ப இவனுக்கு எல்லாமே புதிராய்க் கிடக்கு.
எங்கை போறம்.... ஏன் போறம்.... எதுவுமே மனசுக்கை பிடிபடமாட்டன் என்னுது.
இதுவரையிலை என்ன பயிற்சி என்டாகுதல்  சொல்லி இருக்கலாம். ஆனால் மூச்சு விடயில்லையே. ஏதேனும் +டகமாய் என்டாலும் சொல்லியிருப்பினமோ.
கடைசி வகுப்பிலை சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு வரியாய் நினைச்சுப் பார்க்கிறான். அது மீளமீள நினைவிலை ஊருது.
நீங்கள் எங்கடை போராட்டத்திலை ஒரு உன்னதமான பணிக்காக பொறுக்கி எடுக்கப்பட்டு இருக்கிறியள். நீங்கள் ஒவ்வொருவரும் சராசரி மனுசரில்லை. உண்ணவும் உடுக்கவும் பிறந்த ஜடங்களிலலை. இந்த மண்ணிடை புதல்வர்கள். இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க பிறந்தவர்கள். நீங்கள் சத்திரியர்.  உங்களுக்கு ஆசா பாசங்கள் கிடையாது. உங்களுக்கு மரணங் கிடையாது. தலைவன் கட்டளை ஒன்றே தாரக மந்திரம். நாளை இந்த மண் போற்றுகின்ற உன்னதத்துக்கானவர்கள் நீங்கள்... காலம் உங்களை வாழவைக்கும். மண் உங்களை வீரமறவர் எனப் போற்றும்..
இதுகள் எல்லாம் எவ்வளவு உன்னதமான வார்த்தைகள். பைபிள் வாசகங்ளைப் போல.
ஓவ்வொரு வார்த்தையும் அவன்றை உடம்புக்குள்ளை  ஊர்ந்;து திரியுது. உடம்பு மசிரெல்லாம் புல்லரிக்குது. இரத்தநாடியள் புடைக்கிறது. மனம் புளங்காயிதம் அடையுது. ஏதோ ஒரு பெரிய காரியத்துக்கு பயன்படப்போறம்  என்ட நினைப்பு வர நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறான்.
திடீரென்டு முன்னாலை நடந்தவன் நிக்கிறான். எல்லாற்றை நடையும் தடைப்படுகுது. கடற்கரையிலை இருந்து கனதூரம் வந்துவிட்டது போலை மனசு சொல்லுது..
இது கடற்கரைககும் குடிமனைக்கும் நடுவான இடம். பக்கத்திலை  ஒரு கொட்டில் குடிசை தெரியுது. பெரியவன்  இவை மூன்று பேரையும் நிற்கும் படி சைகை காட்டிவிட்டு கொட்டில் பக்கம் நடக்கிறான்.
அங்கே தீக்குச்சி கிழித்து குப்பி விளக்கு கொழுத்தப்படுகிறது. மங்கல் வெளிச்சத்திலை பக்கத்திலை இன்னுமொரு ஆள் நிற்கிறான்
இவனுக்குள்ளை ஒருபக்கம் வியப்பு. ஒருவிதமான பெருமிதம். அடுத்தது என்ன என்ற தவிப்பு இன்னொரு பக்கத்திலை பயம்இப்படி சும்மா போக்குக் காட்டிப்போட்டு தனியக் கூட்டியந்து தட்டிப்போடுவினமோ என்ற பயம்.
நினைக்க நினைக்க நெஞ்சு திடுக்குறுகிது. வியப்பு பெருமிதம் எல்லாங் கலைஞ்சு பயத்தின் பக்கம் யோசினை போகுது.
இந்த இருட்டிலை ஏன் தனியக் கூட்டி வருகிறாங்கள்... என்ன பயிற்சி என்டு ஒரு விளக்கமும் சொல்லயில்லை. ஏன்...? கையிலை தேடா வடக்கயிறு வைச்சிருக்கினம்.  இதோடை நீட்டு வாள் வேறை. கருக்கிருட்டிலையும் கூர் பளிச்சிட்டு பயமுறுத்திது. இப்பதான் .கே., கலிபர் என்று ஆயுதங்கள் குவிஞ்சுபோய் கிடக்கே. அப்ப வாள் எதுக்கு.
பயம் விரிஞ்சு படந்து வளருது. உடல் நடுங்கத் தொடங்குது.
எதுவாய்யிருக்கும். 
நான் வதை முகாமிலை  நடத்தின சித்திரவதைகள் மேலிடத்தின்டை கவனத்துக்கு போயிருக்குமோ. இருக்காது. அப்பிடியென்டாலும் அவையள் தந்த ஓடரைத்தானே செய்தனான். ஒரு மனுசன் செய்யிற பழி பாவங்கள் அவனைச் சும்மா விடாதென்ற  விசையம் உண்மையோ. ஆயுதம் தூக்கினவனுக்கு ஆயுதத்தாலைதான் சாவு என்றது இதுதான் போலை கிடக்கு.
அவனது மனசு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. என்னைத் தட்டத்தான் போறாங்கள். இதுதான் உண்மை. திரும்பி ஓடுறதுதான் புத்திசாலித்தனம். நாலுபக்கமும் கண்கள் துழாவுது. எங்கை ஓடுறது. பெரிய வெளி. இனித் தப்பவே முடியாது.
எதுவாயிருந்தாலும் சந்திச்சுத் தான் ஆகவேனும்.
பெரியவன் கொட்டிலிலை இருந்து  திரும்பி வாறான். அவனோடை இன்னொருத்தன். இப்ப நாலுபேர் ஆகி விட்டது. இனித் தப்பிறதென்பது நடக்காத காரியம்.
கொட்டில்லை இருந்து புதிசாய் வந்தவன் வழிகாட்ட வேறு திசையிலை நடக்கினம்.

இரன்டு மூன்று நிமிடம் நடந்திருப்பினம். கோட்டைச் சுவர் போல கற்கள் அடுக்கிய கல்வேலி. இடையிலை சின்னக் கடப்பு. கடப்பினுடாக நுழைஞ்சு வரப்பிலே நடந்து நடு வயல் வந்தாச்சு. வயலறுத்து எஞ்சிய அடிக்கட்டைகள் கூட உக்கிப்போச்சு. கடுங்கோடை.  வயல் புழுதியாய் பறக்கிது.
திடீரென்டு கேக்கிற விசித்திரச் சத்தத்திலை குலைநடுங்கத் தொடங்கிது. நரவெடில் நாய்களுக்கு மோப்பம் தெரிஞ்சிருக்க வேனும். நாய்கள் குலைக்கிது. ஆனால் குலைக்கிற சத்தம் புதுசாய் இருக்கு.
இது கினத்துக்குள்ளை இருந்து  எழும்புற அந்தரிப்புக் குரைப்பு. கினற்றுக் உள்ளேரோச்|சை அடிக்கறான் ஒருவன். சோடி சோடியாய் கண்கள் மின்னுது... ஒன்று... இரன்டு... மூன்று...
பதினாறு சோடி கண்கள். இன்னும் கூட இருக்கும் போல தெரியுது. இவ்வளவு நாய்களும் எப்படி கினற்றுக் உள்ளே விழுந்தது. இவற்றை வெளியே எடுத்து விடுறதுதான் கடசிப் பயிற்சியோ. இவனாலை எதையும் தீர்மானமாய் நினைக்க  முடியவில்லை.
இப்போ பெரியவன் கட்டளையிடத் தொடங்கினான். காரியங்கள் நடக்குது. மனிலாக் கயிற்றின் ஒரு முனையை வெளியே கிடந்த கட்டையிலை கெட்டியாய் கட்டினான் ஒருத்தன். ஆடுத்த முனை கினற்றுக் உள்ளே இறக்கப்பட்டது. இறந்குவதற்கு வசதியாய் கயிறு சென்ற திலையிலை குத்துக் கற்கள் நீட்டிக் கிடக்கு.
இவன் கினற்றை பார்க்கிறான். கினற்றுக்குள்ளே தன்னி இல்லை. கோடை வெய்யிலிலை வற்றிப் போயிருக்கலாம்.  என்ன நடக்கப் போகிறது என்டதிலேயே  இவன்றை சிந்தனை உறைஞ்சு கிடக்கு.
அமைதியைக் குலைத்து பெரியவன் பேசத் தொடங்கினான். அவனின் குரல் இயல்பு குறைஞ்சு இறுகிக் கிடக்குது.
இது உனக்கு கடைசிப் பயிறற்சி. இதைக் கடந்துவிட்டால் நீ களத்தில் இறங்க வேன்டியவன். இப்பொழுது நீ செய்ய வேன்டியதெல்லாம் ஒன்றுதான். மனதை ஒருநிலைப்படுத்து. அதை எங்கும் அலையவிடாதே. கண்களை மூடு. உன் நோக்கம், உன் சிந்தனை, எல்லாம் ஒருவழிப்படட்டும்.  நீ தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற் பட்டவன்... இந்த மன்... அதன் மீட்பு... இது ஒன்றே உன் லட்சியம்... அது மட்டுமே உன் வாழ்வின் குறி.
இப்பொழுது உன்னிடம் ஒரு வாள் தரப்பட்டிருக்கிறது. கூரிய வாள்... இக் கயிற்றின் வழியே கினற்றுள் இறங்கு. வெட்டு. அனைத்து நாய்களையும் வெட்டு. இப்பொழுது இவை நாய்களல்ல... உன் எதிரி.  வெட்டு. இவைகள் எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள்... எம் பெண்களின் வாழ்வை சிதைத்தவர்கள்...
எரியும் நெருப்பில் எங்கள் அப்பாவி மக்களை உயிருடன் எரித்தவர்கள்... எங்கள் வீடுகள் மீது  குண்டு போட்டவர்கள். வெட்டு. ஒன்றும் விடாமல்... அத்தனையையும்... இது தலைவரின் ஆணை... ஆணை. 
இவன் கண்கள் மூடியபடியே கிடக்கிறது.
முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடி மறையுது. உடலின் நரம்புகள் அனைத்தும் புடைத்து வெறிபிடிக்கிறது.
கண்களைத் திறந்தான்... நீண்ட வாளை
உற்று நோக்கினான். அதை வாயில் கௌவிக் கொண்டான். ஓரு கணப்பொழுதுதான் கழிந்திருக்கும். கயிற்றின் வழியில் கினற்றுக்குள் இறங்கத் தொடங்கினான்.

மேலிருந்து ரோச் வெளிச்சம் கிணற்றை நிறைக்கிது. நாய்கள் இவன் வருவதைக் கண்டுவிட்டுதுகள்... இரன்டு மூன்று நாட்கள் சாப்பாடு இல்லாமல் கிடந்திருக்கும் போல. ஒன்றினைந்து இவன் இறங்கும் திசையில் கூடி குதற தயாராகுதுகள். இல்லை. சிலசமையம்  தங்ளை காப்பாற்ற ஒருவன் வருகிறான் என நினைத்திருக்கக் கூடும். வைத்த கண் வாங்காமல் இவனையே பார்த்து ஏங்கிக் குழையுது.
இவன் கடைசிப் படியை அன்மித்து விட்டான். ஓரு கால் கடைசிப் படிக்கல்லிலே. ஒரு கையாலை கயிற்றை பலமாகப் பிடித்துக் கொன்டான். மறு கையாலை வாயிலையிருந்து வாளை எடுக்கிறான்.
இப்பொழுது நாய்களுக்கு தெரிந்து விட்டது. வருபவன் காப்பாற வருபவன் இல்லை. தாக்க வருபவன். எல்லாம் ஒன்றினைந்து மூர்க்கமாய்  இவனை குறிவைத்து குரைக்குது. ஓவ்வொன்றின் பல்வரிசையும் குதறிக் கிழித்துவிட காத்துக்கிடக்குது.
இவன் கீழே பார்க்கிறான்.   இனி இதிலிருந்து கீழே குதித்து இறங்கவேனும். ஆனால். குதிக்க வேண்டிய இடத்தில் நாய்கள் குறிவைத்து நிற்கிறதே... முதலில் அவற்றை இதிலிருந்து விரட்டவேனும்.
கண்மூடித் திறக்கு முன் அது நடந்தது. படியில் நின்றபடியே கயிற்றில் கையை நுகைத்து உடலைச் சரிவாக்கி வாளை ஓங்கி ஒரு வெட்டு.  ஏதோ ஒரு நாயின் உடலில் விழுந்திருக்க வேனும்... சிறிய வெளிப்பு...  மீள நாய்கள் இனைவதற்குள் அதில் குதித்து விட்டான்.

வீசி வெட்டத் தொடங்குகிறான். அவன் நினைத்த படி இந்தப் பயிற்சி இலகல்ல. ஒன்று. இரன்டு. மூன்று
நாய்கள் விழுகிறது.
அதுகள்  இப்போ எதிர்ப்;பதை விட்டு பதுங்கத் தொடங்குகிறது.
கொலையுண்ட நாய்களின் இரத்தம் தெறித்து உடல் பிசுபிசுத்து ஒட்டுகிறது... நெற்றியில் வியர்வை வெள்ளமாய் பெருக்கெடுதது ஓடுகிறது. வழித்தெடுத்தான். கையில் வியர்வையும் இரத்தமும் சேர்ந்து தடிப்பாய்  பிசுபிசுக்கிறது. ஒருகணம்  வழித்தெடுத்த கையைப் பார்த்தான்... இரத்தம்... சிவப்பு இரத்தம்.
மனம் தடுமாறுகிறது. கைகள் சோர்ந்து வீழ்கிறது. தலை சுற்றுகிறது. வயிறு குமட்டுகிறது. ஒவ்வொரு நாயும் உயிர்ப்பிச்சை  கேட்கிறது. கால்களுக் கிடையில் வாலைப் பதுக்கி கண்ணில் நீர் வடியக் கெஞ்சுகிறது.
கண்களை இறுக மூடித் திறக்கிறான்
வெட்டு. வெட்டு.  ஊம். .தயங்காதே. இவை அப்பாவிகளில்லை. உன் பரமவைரிகள். வெட்டு.
பெரியவன் குரல்  கினற்றின் சுவர் எங்கும் பட்டு எதிரொலிக்கிறது.
கண்களைத் திறந்தான். முடியவில்லை. எப்படி வெட்டுவது. இரத்தம். பச்சை இரத்தம். எனது உடலில் ஒடுவதைப் போல. அம்மாவின் உடலில் ஒடுவதைப் போல. இன்னும்இன்னும்  

தலை கிறுகிறுக்கிறது. எப்படி வெட்டுவது.  அவன் மனம் தயங்குகிறது.
வெட்டு... இது தலைவரின் கட்டளைநீ தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டவன். ஆணை மீறேன் எனச் சத்தியம் செய்தவன்.  வெட்டு...
தலைவரின் ஆணை என்ற சொல்லு சுவரெல்லாம் பட்டு அதிர்கிறது. மனம் இறுகி விடுகிறது. வெறி கொண்டவன் போல வெட்டத் தொடங்கினான். நாலாபுறமும் சிதறிய அனைத்தையும் வெட்டிச் சாய்க்கிறான்...
சத்தம் அடங்கிவிட்டது. மூச்சு வாங்குகிது. ஓரு நிமிசம் ஓய்வு வேனும் போல இருக்கிது. கினற்றை பார்க்கிறான்.  எங்கும் பிணக் குவியலாய்... எல்லாம் உடல்களாய்...
ஒரு விரக்திச் சிரிப்பு... பார்க்கச் சகிக்கவில்லை... கண்களை மூடுகிறான்.
அமைதி. எல்லா ஓசைகளும் அடங்கிய பேரமைதி. இப்படி ஒரு அமைதியை சந்திப்பது இதுவே முதல் தடவை.   அவனுக்கு இந்த அமைதி பிடித்திருந்தது. அதை ரசிக்கவேனும் போல இருந்தது... ஆனால்... ஆனால்... கண்களைத் திறக்கமுடியவில்லை... திறந்தால் எங்கும் பிணக்குவியல்...
கண்கள் மூடியபடியே கயிற்றின் திசையில்  காலெடுத்து வைக்கிறான். இடறி விழுகிறான்... முகம் முழுவதும் இரத்தம்.

இந்த நிசப்தம் கலைகிறது... எப்படி வந்தது அந்தச் சத்தம். கண்களைத் திறந்தான்... சத்தம் வந்த திசையில் பார்வை போகிறது. நேற்று அல்லது இன்றுதான்  போட்டிருக்கும்... கண்கள் திறக்காத இரன்டு குட்டிகள்... பசித்திருக்கும் போலை... அல்லது தாயின் உடற்சூட்டை கானவில்லையே என உணர்ந்திருக்கும்.
பரிதாபமாக இருக்கிறது. அம்மா... அம்மா என்று அழுவது போல... பாவம்... என்ன செய்யுமோ... எடுத்து வெளியே கொண்டுபோய் விட்டு விடலாம். மீள மனம் இளகிப் போகிறது. வாளை எறிந்து விட்டு குட்டிகளைத் தூக்க வேனும் போல இருக்கிறது.
மேலே நின்றவர்களுக்கு இவனது தடுமாற்றம் புரிந்திருக்க வேனும்.
நில்... என்ன யோசிக்கிறாய்... குட்டி என்று பார்க்காதே... எல்லாமே உன் எதிரிகள்... இன்றில்லா விட்டால் நாளை... வெட்டு...
பாவம் பால்குடிக்குட்டிகள் என்று கத்த வேனும் போல இருக்கிறது இவனுக்கு.
வெட்டு... சோராதே... தலைவனின் கட்டளையை நினைவிலை எடு. அது உனக்கு உத்வேகந்தரும். கடைசி நிமிடத்தில்  தோற்று விடாதே... தூக்கு வாளை... வெட்டு.
எப்படி வெட்டுறது... உடலிலை இரத்தம் கூட இருக்காது... மனசு மறுக்கிறது... இவனால் முடியவில்லை.
வெட்டு... தயங்காதே... நீ பாவம் பார்க்க மனிதன் அல்ல... வீரன்... மண்... அதன் மீட்பு... இவை மட்டுமே உன் இலட்சியங்கள்... தலைவரின் கட்டளையை நிறைவேற்று...

நிமிர்ந்து பார்த்தான்... இரண்டு துவக்குகளும் இவனை குறிபார்த்து நிற்கிறது. கண்களை மூடிகிறான். பத்து வினாடிகள் கடந்திருக்காது. மீளத் திறந்தான்... வாளைக் குறிவைத்து நடந்து  கண்களை மூடியபடி ஒரு வீச்சு... குறிதவறவில்லை. சத்தம் அடங்கிப் போகிறது.
திரும்பிப் பார்க்கவில்லை. கயிற்றைப் பிடித்து வெளியே வருகிறான்.
நீ  இறுதிப் பயிற்சியில் வெற்றிபெற்று விட்டாய்|
கடுமை தளர்ந்து இயல்பாய் வருகிறது பெரியவன் வார்த்தை. இவன் திரும்பிப் பார்க்க வில்லை. 
வந்த திசையில் திரும்பி நடக்கிறான்.
••
எப்படியோ மூன்று வாரங்கள் கழிந்து விடுகிறது
அன்று புதன் கிழமை.  முன்னிருட்டுக் காலம். விடியப்புறம் மூன்று மணிக்குப் பிறகுதான் கீழ் வானத்திலை நிலவு வரும்.
இப்ப நேரம் இரவு பதினொரு மணியைத் தாண்டுது. வானத்திலை  +வும் பிஞ்சுமாய்  வெள்ளி +த்துக்கிடக்கு. ஊரெல்லாம் மெல்ல மெல்ல படுக்கைக்கு போயாச்சு. ஒரே நிசப்பம். சில்வண்டுகளின்  இரைச்சல் தவிர வேற சத்தங்கிடையாது.

ஒருஎல்வ்| வண்டி அந்த எல்லைக் கிராமத்திலை மெல்ல நுழையுது. உள்ளுக்கை நீட்டு வாள்கள் கைக்கோடாரியள்  துவக்குகள்  இவையள்... இவையளோடை இவனும்.
வண்டி நிக்குது. வண்டிக்கு முன்னாலை .கே, யோட காவலுக்கு நிற்கிறான் ஒருத்தன்.  மற்றவர்கள் இறங்கி நடக்கினம். ஏல்லாற்றை கையிலையும் வாள். சிலபேற்ரை தோளிலை துவக்கு.
கிராமம் கலவரப்படுகிது. கூக்குரல் கேட்குது. சனங்கள் தடுமாறி ஓடுது... அழுகை...  ஒப்பாரி... கெஞ்சல்... வெட்டு... வெட்டு... என்ற கட்டளைத் தொனி.
அரைமணி நேரம் கழிஞ்சிருக்காது. இப்ப சனத்தின்றை சத்தம் அடங்கிப்போகுது. ஆழ்ந்த நிசப்தம்... நிசப்தத்தை கிழித்து. இவையளிடை  சத்தம் மட்டும் எங்கும் எதிரொலிக்குது.
எல்லாம் அலுவலும் முடிஞ்சுது போல. ‘ஏல்வ்| வண்டி படு வேகமாய் திரும்பிப் போகுது.
குஞ்சும் குரமானுமாய் +த்துக் கிடந்த நட்சத்திரங்கள் எல்லாம் கொட்டுண்டு போக பெரிதாய்  ஒன்றிரன்டு மட்டும் வானத்திலை அழுது வடியுது. மேற்க்கு வானில் பிறை நிலவு.
பொழுது விடியுது.
எல்லா இடமும் மரணஒலம்... ஒப்பாரி... அழுகுரல்...
கிராமத்தின் பொது இடத்திலை அடுக்கிக் கிடக்கு நாப்பத்திஎட்டுப் பேர்.
அதிலை பதிரொரு பொம்பிளையள்... பதினாறு சிறுவர்கள்... ஒன்டு நாலு மாதக் குழந்தை... கட்டிப்பிடிச்சபடி தாய்... பாவம்... காப்பாற்ற முயன்றிருப்பாள்.

எல்லாம் வெள்ளைச் சீலையாலை மூடிக்கிடக்கு. சீலையெல்லாம் திட்டுத்திட்டாய் இரத்தம். கண்கொண்டு பாக்கமுடியல்லை.
எல்லா முகத்திலையும் பயம்... பதட்டம்... திரும்பவும் வருவாங்களோ என்றபயம்.
நாடுமுழுதும் இதுதான் செய்தி...
இவன்ரை இதழ்கடையிலை இலேசாய் ஒரு முறுவல்... அதிலை சோகமா... பெருமையா... விரக்தியா... எதுவுமே தெரியல்லை.
ஒருவாரம் கழியுது.
எல்லாம் மறந்து போகுது.
°°°°
இவன் எழுதி முடித்து முற்றுப்புள்ளி வைத்து நிமிர்கிறான்.
இதழ் கோடியில் ஒரு அசட்டுப் புன்னகை. எழுதிய காதிதக் கும்பலை  ஒரு கணம் வெறித்துப் பார்க்கிறான். எல்லாச் சொற்க்களும் வெட்டுண்டு குருதிவழிய பிணங்களாய் கிடக்கிறது. ஒரு கொலைகாரனுக்குரிய வெறி இன்னமும் முகத்திலிருந்து கலையவில்லை. அவனை அறியாமலே முனுமுனுக்கிறான்
இதோடை சரி அவன்றை கதை முடிஞ்சான்.|