Wednesday, 2 January 2013

முள்வேலி






னித் தரித்தால்
உயிர் தரிக்காதென்றுணர்ந்த போது
கலங்கி
மண்தொட்டு வணங்கி கடல் கடந்தவன்
இருபதுதாண்டுகள் கழிந்து
மீள வருகிறேன்
எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார்கள்

எது முடிந்தது?

மாறி மாறிப் பெய்த மழையால் கூட
கழுவப்படாமல் கறைபட்டுக் கிடக்கிறது
தேசம்

மூச்சில் இன்னும் கந்தக நெடி
பல்லி சொல்வது கூட
எந்திர துப்பாக்கி சத்தம்போல் அதிர்கிறது

அச்சம் கலையாத முகத்துடன்
தங்களுக்கான கூடுகளை முடைகின்றன
தூக்கணாங் குருவிகள்

பல்லாயிரக்கணக்கானவரின் மரண ஓலங்கள்களால்
மெழுகப்பட்ட சுவர்களின் மீது
பல்லிழித்தபடி காட்சி தருகிறான்
அரசன்
அவனது பார்வை விலக்கி
சிறுநீர் கழிப்பதற்குக் கூட
 என்னால் ஓதுங்கமுடியவில்லை

விதைக்கப்பட்ட ரவைகளில் இருந்து முளைவிட்டிருக்குமோ?
என ஐயுறுவண்ணம்
தேசம் முழுவதும் இராணுவச் சிறுவர்கள்

-9 வீதியின் மேற்கோரம்
ஒற்றைக்காலை போருக்கு காவுகொடுத்தவள்
உயிர்க்கூட்டை இறுகப் பிடித்தபடி குந்தியிருக்கிறாள்
ஏங்கிய விழிகளுடன்

எதிரே
வீதியின் கிழக்கே  
அவள் ஊரும்
தென்னைகள் சூழ்ந்த வளவும்
போக முடியாத வீடும்

காட்டுக் குருவிகளால் கூட
என்னிடம் ஒரு இயல்பான காலையை
அழைத்துவர முடியவில்லை

பேயறைந்தவர்கள் போல்
எல்லோரிடமும்
இருள் கனத்த வெறுமை

இருந்தாலும்
எல்லாம் முடிந்துவிட்டதென்கிறார்கள்
முடிந்ததை பேசுதற்கும் அஞ்சுகிறார்கள்

ஒன்றுமே நடக்காததைப் போலவும்
எதையுமே பார்க்காததைப் போலவும்
நிலத்தின் எல்லையில் எழுந்து  நிற்கிறது
பாரிய தொலைபேசி விளம்பரம்

முடிவாய்
நான் தவழ்ந்த மண்ணில்
ஒருபிடி எடுத்து வரும் ஆவல் உந்த
ஊர் நுழைய முனைகிறேன்

முள் வேலி

இன்னும் சிறைப்பட்டே கிடக்கிறது
என் சிற்றூர்
ooo


ஜுன் 6, 2010
 

Friday, 28 December 2012

விண்ணப்பம்




போர்
பெரும் சூறையாய் எழுந்து
சுழற்றி வீசிற்று

வீழ்ந்தேன்
தொறன்ரோ பெரு நகரத்து
பேழை வயிற்றுள்

இன்னும் கிடந்து மாய்கிறேன்
செரிக்காது

பாரிய எந்திரத்தின் சக்கரத்தில் ஒட்டிய
இரும்புத்துண்டென உழன்று உழன்று ஓடி
நசிகிறேன்

பெருந்தெருக்களில்
எதிரும் புதிருமாய் விரையும் வாகனங்களிடை
தவறி வீழ்ந்த  துண்டுப் பொதியென
நாலாபுறமும் அடிபட்டலைந்து
சிதறுண்டு போகிறேன்

வின்டர்ப் பனியின் உறைவில்
விறைத்து விறைத்து
உடல் நைந்துபோயிற்று

ஓசோன் பொத்தலில் ஒழுகும் நெருப்பில்
தோல் பொசுங்கி வேகிறது

ஆண்டுகள் இருபது கழிந்தும்
இன்னும்; இன்றும்; இக்கணமும்
இந்தப் பாழும் உடலைச் சுமந்து சுமந்து
அலைகிறேன்

நடைப்பிணமாய் கனக்கிறது
உடல்

ஒருகால்
இற்றுச் செரித்து
மண்ணில் உரமாய் வீழ்ந்தால்
நாளை
இன் நிலத்துக்குரிய ஒரு மரமாயெனினும்
எழுவேன்


04 09 2012

Monday, 24 December 2012

அம்மா



                                                                                                நன்றி: ஓவியம்- Pr Rajan



நினைவுகள் 
பெரும்  சோலைக் காடு
ஞாகக் கோடரியை தீட்டிச் தோளில்  சுமந்தபடி
இருள்  வனத்தில் அலையும்  
நினைவு வெட்டி  
நான்


வனத்தின் அழகு
ஒலியின் மெல்லிய ரீங்காரம்
அதனைப் புறந்தள்ளி
மனதை சுண்டியிழக்கிறது
ஒரு தாய்க் குருவியின்  துயர் நிறை  பாடல்
குந்தியின் சரிதம்

அவளென் நினைவுக் கானகத்தின் முதுமரம்
வனநீலி

தன் ஐஞ்சு குஞ்களுக்கும் உணவு தேடி
அலைந்த கதையைச் சொல்லும் போதில்
நாடோடியின் புல்லங்குழலி ன் பிரவாகம் எழுந்து
மனதைப் பிழிந்து செல்கிறது


கொடிய விலங்குகளிடமிருந்து தன் குஞ்சுகளை
பொத்திக்காத்த கதை பறைகையில்
எழுகிறது
காட்டுப்புயலின் பேரோசை
கானகம் நடுங்க


மௌனம் கனத்த நெடுநீளப் பொழுதுகளில்
அதை அழித்து
இளமை நினைவினை மீட்டுவாள்
சுண்டி இழுக்கும்
ஈரஇரவின் ஒற்றைப் பறையொலியில்
வசமிழந்து போகிறேன்

எப்போதாகிலும் அருந்தலாய்
தன் மகிழ்வைப் பாடும் கணங்களில்
மோனக் கடலின் மெல்லிய அலையொலி
மனதை வருடும்


இன்று
பனிப்புலத்தில் உழலும் வனவாசி நான்
தினமும் அலைகிறேன் 
நினைவுக் கானகத்தில்


துயருறு கனங்களை மீட்டி
எழுகிறது
தாய்க்குருவியின்  பாடல்

வாழ்நாள் முழுவதும்
தன் சந்ததிக்கென்றே உழன்றவள்


பொத்தி வைத்திருக்கமாட்டாளா ?
ஒரு துண்டு சேதி


சிறு பொறி ?

24032011