Friday, 15 June 2012

தூக்கணாங்குருவிக் கூடு


1999 என்று நினைவு.
அன்று கவிஞர் செழியனின் ஒரு கவிதை நூல் வெளியீடு. ‘மிட்ஸ்காபரோமையத்தில் நிகழ்ந்தது. விழா முடிய நண்பர்கள் எங்கள் வீட்டில் கூடினோம்.அன்று புதிய விருந்தினராக மூவர் எங்களுடன் கலந்து கொண்டனர். அவர்களை கவிஞர் சேரன் அழைத்திருந்தார். மன்சூர் நவாஸ் என இஸ்லாமிய நண்பர்கள் இருவர். அடுத்தவர்கூடைக்குள் தேசம்திரட்டைத் தந்த கவிஞர் முரளிதரன். இலங்கையில் இவர்கள் மூவரும் கல்விச் சேவையில் பணிபுரிபவர்கள். உயர்கல்விகாக புலமைப்பரிசில் பெற்று 'யார்க்' பல்கலைக்கழகம் வந்திருந்தனர். அந்த இரவு  மிகமிக இனிதாகக் கழிந்ததது

அன்று தொடங்கியது தான் எமது நட்பு. அவர்கள் தொரன்றோவில் தங்கியிருந்து ஒன்றரை வருடமும் ஒவ்வொரு வார இறுதி விடுமுறை நாட்களும் அவர்களோடுதான் எங்கள் பொழுது கரைந்ததுஇவர்களில் மன்சூர் அவர்கள்  அக்கரைப்பற்று ஊரைச் சேர்ந்தவர். இது அவர் தொடர்பாக ஏலவே நான் அறிந்திருந்த தகவல். வெயில் தணியக் குளிர்காலம்தொடங்கியது. . ஒரு வார இறுதி மாலை. அதை எங்கள் வீட்டிலே கொண்டாடினோம். ஊரின் நினைவுகளில்  அலைந்தது உரையாடல்நேரம் கரைந்து கொண்டிருந்தது. நான் கிளிநொச்சி தொடர்பாக  திடீரெனநானும் கிளிநொச்சி தான்என்றார் மன்சூர். நான் உற்சாகத்தின் உச்சத்திலிருந்த கணம் அதுஎந்த முன்யோசனையுமின்றிஅப்ப எப்படி அக்கரைப்பற்றுக்கு போனீர்கள்என்றேன்சற்று அசட்டுத்தனமான கேள்விதான். அவருக்கு கணீர் என்ற குரல்எந்தவித பதட்டமுமில்லை. மிகத் தீர்கமான ஒலித்தது பதில்.
எங்களைத்தான்  நீங்கள் வாழ்ந்த ஊரைவிட்டு துரத்திவிட்டீர்களே
பேயறைந்தது என்பார்களே! அவரது பதிலில் நான் அப்படித்தான் ஆனேன்;. அந்த அதிர்ச்சியிலிருந்து விலக எனக்கு பல நாட்கள் எடுத்தன.
ஊரில் அந்தக் கொடுமை நிகழ்ந்த போது  நாங்கள் எல்லாம் வாய் மூடி மௌனிகளாக இருந்தோம். பலர் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தனர். கேலிசெய்து கொண்டாடியவர்களும் உண்டு. மனதுக்குள் வேதனைப் பட்டவர்களும் உண்டு. இப்போது  நினைக்க   நினைக்க வெட்கமும்  வேதனையும் எங்கள் மீதான அருவருப்பும் ஒரு விலங்கைப்போல குந்தியிருந்து என்னை சப்பித் தின்றது.

அவர்களது கல்விக் காலம் முடிந்தது. ஊர் திரும்பினர்.. பின்னரும்  தொடர்ந்தது எங்கள் நட்பு.  அடுத்த கோடைகாலம் வந்ததுமன்சூர் எனக்கொரு நினைவுப்பரிசில் அனுப்பியிருந்தார். அந்தப் பொதியை திறந்ததேன். ஆச்சரியமாக இருந்தது.  உள்ளே ஒருஅழகான தூக்கணாங் குருவிக் கூடு.

‘’வயலுக்கு போயிருந்தேன்இரண்டு கூடு எடுத்து வந்தேன்அதில் உங்களுக்கு அனுப்பியது ஆண் குருவியின்கூடு’’
என்றார்.

  குருவிக் கூட்டிலும் இப்படி பாலின வேறுபாடு உண்டா?.  அவரிடமே விபரம் கேட்டேன். ஆண் குருவியின் கூடு காவற்பரன் போலஅதற்கு இரன்டு வாயில்கள் உன்டுகுருவி நுழைந்து மேலே செல்ல கீழிருந்து குளாய் போன்ற பகுதி இருக்கும். இடையில் மடி மேலே நீளக் கயிறு. அடுக்களையில் தொங்கும் உறி போல. கூட்டின் மடியில் படுத்தபடி தலைநீட்டிக் காத்திருக்க மேலே பிறிதொரு வாயில் இருக்கும். யன்னல் போலஅதன் காதற் துணையின் கூட்டிற்கு மறுவாயில் கிடையாது. கீழிருந்து ஒரு வாயில் மட்டுந்தான். பேடை அடைபடுக்கும் காலத்தில் ஆண் குருவி  காவல் இருக்கும். வேறு விலங்குகள் தன் பேடைக்கு தீங்கிழைக்க முனைந்தால் எச்சரிக்கை குரல் கொடுக்கும். இரண்டும் தப்பிவிடும்.
இயற்கையில் இத்தனை வினோதங்களா? இத்தகை நுட்பமான ஆண் பெண் சமத்துவமாநினைக்கவே ஆச்சரியமாக இருந்தது. மனிதர்கள் தான் இயல்பை தொலைத்துவிட்டோம். இப்போ தேசந்தேசமாக அலைகிறோம். உயிர்ப்பற்ற வெறும் கூடுகளாக.

அந்த நினைவுப் பரிசை அழகாக என் வீட்டுக்கூடத்தில் வைத்திருந்தேன். ஊறைபனி கழிந்து இளவேனில் காலம்காற்றில் மெல்ல வெப்பம் ஏறத் தொடங்கியது. யன்னல் திறந்தேன். திரென நுழைந்த காற்றில் ஆடியது கூடு. உச்சத்தில் ஆடும் ஊஞ்சல் போல. உற்சாகத்தில் என் மனசும்.

அன்று பிறந்தது இக் கவிதை.

இக் குறிப்பை எழுதும் இக்கணத்தில் ஆண்டுகள் பன்னிரண்டு கழிந்துவிட்டது. அவரது நினைவுப் பரிசு இன்றும் என் கூடத்தில் உண்டு. நட்பும் அங்ஙனமே. நான் கூடிழந்து நாடு கடந்து இருபது ஆண்டுகள் கழிந்ததுஇன்றும் என் மனப்பறவை என் தேசத்து வானில்தான் அலைந்து கொண்டிருக்கிறது.




தூக்கணாங்குருவிக் கூடு

ஏழுகடல்தாண்டி
ஐந்து நிலங்கடந்து
பனி நிலக்குடிலில் இடம் பிடித்திருக்கிறது
தூக்கணாங் குருவிக் கூடு

ஊரிலிருந்து நண்பன் அனுப்பிவைத்த
நினைவுப் பரிசு

சாளர வழி காற்றூதும்;
கூடு
அசையும்
போரில் அவியும் என் தேசத்து
நினைவதிரும்

ஒரு கூடு முடைய
எத்தனை நாள் முயன்றிருக்கும்
குருவி


நிழல் தேடி
நான் சொல் தேடும் வகையில்
புல்லிதழ் தேடி
பெத்தாச்சி விரலசைவில் இழைகின்ற
கொட்டப் பெட்டியொன்றின் சூட்சுமங்கள் 
 பொருத்தி
தலைநீட்டிக் காத்திருக்க தலைவாயில்
தந்திரமாய் தப்பிவிட மறுவாயில்
குஞ்சுகட்கு பஞ்சு மடி
தாலாட்டி உறங்க வைக்க நீளக்கயிறென்று
வியர்வையிலே குளித்திருக்கும்
இச் சிறுகாற்றில் கூடசையும் போதில் 
செவியில் அதிர்கிறது
கூடிழந்த குருவிகளின் ஒப்பாரி

எனது நிலம்;
பாட்டன் சமைத்த குடில்
எனக்குப் பின் மகளுக்கு
அதற்குப் பின்
அவள் மழலைக்கென எழுந்த
உன் நீளக் கனவெல்லாம் குலைந்து
ஒற்றை நாளில்
துரத்துண்டு
விம்மலையும் விசும்பலையும்
மொட்டாக்கு சேலைக்குள் பொத்தி
காட்டு
வழி  
நடந்த  
துயர்
கூடசையும் பொழுதிலெல்லாம்
நினைவில் அறைகிறது 
 நண்பா!

நெஞ்சங் குமுறுகிறது

இன்று
இக் கூதல்தேசக் குளிரில்
எஞ்சியிருக்கிறது கூடுகள் மட்டுமே

அலைகிறோம்
தேசத்து வெளியெங்கும்
கூடிழந்து
குருவிகளும் நானும்

●●


இளவேனிற்காலம் -2001



நன்றி: "தூறல்" (கனடா)

Tuesday, 12 June 2012

கல்லறைத்தோட்டம்.




காலம் பிரசவித்த சிசுவைப்போலத் தோன்றுகிறது இளவேனில். கிழக்கின் ஓரம் மரங்களிடையே தத்தித்தத்தியபடி இருந்தான் குஞ்சுச் சூரியன். நேரத்தைப் பார்த்தேன். காலை ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கினேன். என்னதான் அவசரமோ? துளிர்விடுவதற்கு முன் பூக்களை  மொட்டவிழ்ந்திருதது மரங்கள்எங்கும் பறவைகளின் கீச்சொலிகள். பால்மொச்சை மாறாத மெல்லிய வெயில். இறகுகள் முளைக்கத் தொடங்கும் கிளிக்குஞ்சைப் போல நிலம். குளிருடைகளுக்குள் உடலை மூடிக்கட்டி வைத்திருந்த மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள்  பிஞ்சு வெயிலைக் கண்டதும் முடிந்தளவு உடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு திரிகிறார்கள். புகையடித்து நிறக்கவைத்த வாழைக்குலை போல பளிச்சென்றடிக்கிறது வெண்மை. ஒரு கவிதையில்இது ருதுகாலம்என எழுதியது நினைவுக்கு வந்தது.

நான் பயிற்சிக்காக நடப்பதற்கு வாய்ப்பு அமைவதில்லை. மதியம்தாண்டப் புறப்பட்டு இரவு முழுவதும் எந்திரங்களோடு எந்திரமாக மாரடித்து அதிகாலை நாலுமணிக்கு வீடு மீளும் எனக்கு  பயிற்சிக்காக அல்ல சும்மா காலாற நடப்பதற்குக் கூட மனசு இடங்கொடுப்பதில்லை. சென்ற தடைவை என் குடும்ப வைத்தியரிடம் சென்ற போது, தினமும் ஒரு அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி வேண்டும் என மிகமிகக்கண்டிப்பாக சொன்னார். ஓவ்வொரு தடவையும் அவரைப் பார்க்கின்ற போது சொல்லுகிற அறிவுரைதான். இருந்தாலும் இம்முறைவெறும் அறிவுரைதானேஎன்று கழித்துவிட முடியவில்லை. இருவாரங்களுக்கு முன் இரவு நித்திரைக்குப் போன நண்பன் ஒருவன் காலை எழுந்திருக்கவில்லை. அன்று காலையில் தொலைபேசியூடாக வந்த இச்சேதி என்னை உலுக்கியிருந்தது. வைத்தியர் சொல்லியும் கேளாத மனசு இதற்குப்பின் மெல்லமெல்ல யோசிக்கத் தொடங்கியது. வேலைக்குப் போகிறாய்; புத்தகம் படிக்கிறாய்; இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் முன்னிக்கிறாய்கலியாணம் காட்சி கொண்டாட்டம் என ஒவ்வொரு வார இறுதியிலும் கூடிக் குடித்துக் கூத்தடிக்கிறாய்; கவிதை எழுதுகிறாய்; சமையல் செய்கிறாய்; போதாக்குறைக்கு பின் முற்றத்தோட்டத்தை வேறு பராமரிக்கிறாய். இவை எல்லாவற்றிக்குமான நேரத்தை உன்னால் எடுத்துக்கொள்ள முடிகிறது. உனக்காக, உன் உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு அரை மணி நேரத்தைக்கூட ஒதுக்க முடியாதா?

ம்மரணபயம் யாரைத்தான் விட்டதுகரையாத கல்மனதைக் கூட கலங்கடித்துவிடும். இப்போ இரு வாரமாக நடக்கத் தொடங்கியிருக்கிறேன். ஒரு கவிதை எழுதுவதைவிட இந்த நடக்கிற சுகம் மெல்லிய சந்தோசத்தைத் தருகிறது. என் வீட்டுப் படியிலிருந்து இறங்கும் போது மனசுக்குள் ஒரு எல்லையை தீர்மானித்துக் கொண்டு புறப்படுவதில்லை. கால்போன போக்கிலே நடப்பது. களைத்தோயும் போது வீடு திரும்புவது. அவ்வளவுதான். அது ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பின்னாக அமையும். நான் படியிலிருந்து இறங்கியதும் எனக்கு முன்னே என் மனக்குருவி புறப்பட்டுவிடும். என் பார்வையிலிருந்து விலகாது தத்தித்தத்தி ஒவ்வொரு இடமாய்  குந்தியிருக்கும். புதுப்புது காட்சிகளை கண் முன்னால் விரித்து வைக்கும். "இது வரைநாளும்  அயலைப் பார்க்காமல் இருந்தாயே! நீயெல்லாம் ஒரு மனிதனா? வெறும் எந்திரம்" என இடித்துரைக்கும். இப்பொழுது ஒரு புதிய உலகம் என்னுள் பிரமிப்பைத் தருகிறது. நிலம் விரிகிற அழகு, காலை நேரத்துப் பணியாளரின் அவசரம், பள்ளிச் சிறுவர்களின் உலகம், ஒவ்வொரு வீட்டின் முன்னுள்ள பூந்தோட்டங்கள்;   இயற்கையை நேசிக்கிற மனிதர்கள், அவர்கள் முதுமையை எதிர்கொள்கின்ற துணிச்சல் இத்தியாதி இத்தியாதி என புதிய உலகத்தை காண்கிறேன். ஒவ்வொரு காலையும் முற்றிலும் வேறுவேறானதாகவே இருக்கிறதுஇப்பொழுதொல்லாம் மனக்குருவியை மேயவிட்டு அழைத்து வருவதே  இந்த நேரத்து வேலை போலாகிவிட்டது.

என் குருவிஎக்லின்டன்&கெனடிச்' சந்திப்பிலிருந்து தென்புறம் திரும்பி கெனடி வீதியில் செல்லத்தொடங்கியதுஒரு பத்து நிமிடங்கள் அதைப் பின்தொடர்ந்திருப்பேன். என் வலப்புறம் விரிந்து கிடக்கிறதுபைன்கில்சேமக்காலை. எனக்கு அதன் வெளித்தோற்றம் மற்றும் விஸ்தீரணம் தொடர்பாக ஓரளவு மனக்கணக்குத் தெரியும். அண்ணளவாக ஒரு சதுர கிலோமீற்றர் வரையில் இருக்கும். சிறு வயதிலிருந்து சுடலை அல்லது இடுகாடுகள் தொடர்பாக மனதில் ஒருவித அச்சம் உண்டு. அத்தகைய கதைகள் பல சொல்லப்பட்டு வளர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்தேவைகருதாது ஒருபோதும் சேமக்காலைக்குள் நுளைந்து பார்த்ததில்லை. தேவை கருதிக் கூட நான் அதிகம் சென்றது சுடுகாடுகளுக்குத்தான்

வெளியிலிருந்து பார்க்கும் போது கல்லறைகள் சிறுசிறு வீடுகள் போலவும், கல்லறைத்தோட்டம் ஒரு சிறு பட்டணத்தின்  ‘மாடல்செய்யப்பட்ட வடிவம் போலவும் என் மனதில் ஒரு படிமம் தோன்றுவதுண்டு. எப்போதாவது ஒரு நாளில் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என பலதடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் நேரம் வாய்த்ததில்லை. இன்று போனாலென்னநான் முடிவு செய்வதற்கு முன்னமே மனக்குருவி உள்ளே நுழைந்துவிட்டது. வாசலிலே பெரிய இரும்புச் சங்கடப்படலைதிறந்து கிடந்தது. அதில் விருந்தினருக்கான பார்வை நேரம் 9:00 – 5:00 என அறிவித்தல் பலகை தொங்கியது.

உள்ளே நுழைந்ததும் முகப்பில் ஒரு வழித்தட வரைபடமிருந்தது. ஒருபுறத்தால் புறப்பட்டால் ஒருவட்டச்சுற்றில் மீள தொடங்கிய இடத்திற்கு வந்துசேர முடியும். என் வலக்கைப் புறத்தில் பராமரிப்பு அலுவலகம் இருந்தது. அத்திசையில் திரும்பினேன். புல் வெட்டுவோர்  பூமரங்களை நாடுட்வோர் குழி தோண்டுவோர். கல்லறைகளைச் செப்பனிடுவோர்  எனச் சீருடையணிந்த தொழிலாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன். பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. இள வெயில் பூக்களில் பட்டெழுப்பும் கவிச்சி மூக்கிலிருந்து பரவி மனசில் நிறைந்தது. உயர மரங்களின் கீழ் மண்ணில் தன் போக்கில் கிறுக்கி விளையாடிக்கொண்டிருந்தான் சூரியப் பெடியன். அவனுக்கென்ன கவலைஎதிரிலிருந்து இளம் பெண்னொருத்தி காலைவணக்கம் என்றபடி என்னைக் கடந்தாள்என் பதில் வணக்கத்திற்குக் கூட காத்திருக்கவில்லை. அவளும் நடைப்பயிற்சிக்கு வந்தவள் போலவே தோன்றியது. வழித்தடத்தின் இடக்கைப் புறத்தில் முதல் கல்லறையைச் சந்தித்தேன். புத்தம் புதிது. வெறும் மண்ணால் மூடப்பட்டிருந்ததுஇரண்டு மூன்று மாதங்கள் கழிந்திருக்குமா?. தெரியவில்லை. மரத்தில் இறுக்கப்பட்ட சிறுசிலுவை ஒன்று பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரிகப் பட்டு ஊன்றப் பட்டிருந்தது. அதுவே தலைமாடென எண்ணிக்கொண்டேன். மார்பில் காய்ந்துபோன ஒருமலர்க் கொத்துகால்மாட்டில்  “NYஎழுத்துகள் பொறிக்கப்பட்ட தொப்பி ஊறப்பட்ட சிறு தடியின்மேல் கொழுவியிருந்தது. இறந்தவன் தினமும் தொப்பி அணிபவனாக இருக்கலாம். சிலசமையம் பேஸ்போல் பிளேயராக இருப்பானோ

மூன்று மாதக் குழந்தைக்குசில்லாலைப் பரியாரியின் கிரந்தி எண்ணை தேய்து, கைகால் பிடித்து, பனையோலைத் தடுக்கில் கிடத்திவிட்டிருக்க, அது நிழலசையும் இளவெயிலில் உடலசைத்து கை கொட்டி முறுவலிப்பது போன்ற மனத்தோற்றம் எழுந்தது. அடுத்தடுத்த கல்லறைகள் மிகப் பழமையானவை. சீமெந்தாலாணவை. சிறு வீடு அல்லது தேவாலையம் போன்ற தோற்றந்தந்தது. இவை அடர்த்தியன முதிர்ந்த மரங்களின் கீழ்அமைந்திருந்தன. அப்பால் நடந்தால்  இடைக்காலத்தவை சீமெந்தில் அமைக்கப்பட்டு கறுப்பு சலவைக் கல்லில் அவர்கள் விபரக் குறிப்பிருந்தது
எனக்கு மறுஜென்மம் போன்ற விடையங்களில் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை. மனித வாழ்க்கை ஒரு முறைதான். முடிந்தவரையில் வாழ்ந்து களி(ழி)ப்பதே சிறப்பு என்ற நினைப்புள்ளவன். இருந்தாலும் இக் கல்லறையைப் பார்த்தபோது புதிய திசையில் எண்ணங்கள் புறப்படத் தொடங்கியது. மனித வாழ்வு முடிந்த பிற்பாடு இரண்டாம் ஜென்மம் என்பது இக் கல்லறை வாழ்வாக இருக்குமா? இவற்றிலும் குழந்தை விடலை முதுமை எனப் பருவங்கள் இருக்குமாசில கல்லறைகளின் தோற்றமே இவ் எண்ணம் எழக் காரணி. கல்லறைகளின் தோற்றம் பாராமரிப்பு உறவினர்களின் சிரத்தை என்பனவற்றின் மூலம் அதன் வயதைக் கணிக்ககூடியதாக இருந்தது. முதிய கல்லறைகளுக்கு யாராவது வந்து போகும் தடங்கள் ஏதும் தெரியவில்லை. அவற்றின்மீது ஒருவித துயர் படிந்துகிடப்பதான உணர்வெழுந்தது. விடலை அல்லது நடுத்தரவயது கொண்ட கல்லறைகள் பல அழகான பூஞ்செடிகளாலும் பிளாஸ்டிக் பூக்களாலும் அலங்கரிகப்பட்டிருந்தன. சில கல்லறைகளின் முன்னால் பூஞ்செடிகள் நாட்டப்பட்டு வீட்டு முற்றம் போலத் தென்பட்டதுபலவற்றில் அருகில்டுலிப்ஸ்மலர் மொட்டுக்கள் முகிழ்த்திருந்தன, பல கல்லறைகளின் மீது ஓளிவிட்டு அணைந்த மெழுகுவர்த்தியின் சுவடுகளைக் கண்டேன். ஒன்றல்ல சிலவற்றின் அருகில் "அரிக்கேன் லாந்தர்" விளக்கு வைக்கப்பட்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த உயிர்ச்சுடர் அணைந்துவிட்டது என்பதை சுட்டும் விதமாக வைத்திருப்பார்களா? அல்லது சில இனக்குழுமங்களின் ஐதீகமா

தெரியாது.

ஒரு சிப்பந்தி புற்தரையை வெட்டிச் சீர்செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லறையின் அருகில் வரும்போதும் சரவக்கத்தியை முகத்தில் வைக்கும் சிகை அலங்காரக் கலைஞனின் பொறுமையையும் அவதானத்தையும் அவனுள் உணர முடிந்தது. கல்லறைக்கு சிறு ஊறுகூட நிகழ்ந்துவிடக் கூடாதென்பதில்  அவன் முழுக்கவனமும் குவிந்திருந்தது. வெளியில் வாழும் மனிதர்களை நினைத்துப் பார்த்தேன். இவன் கூட  தன்னோடு வாழும் உறவுகளோடு இங்ஙனம் நடந்து கொள்வானா?.
தெரியவில்லை.

நடுவில் பெரு முற்றம் போன்ற அமைப்பு இருந்ததுஅதில் இருபுறமும் நீளச் சுவர்கள் அமைத்திருந்தார்கள். சுவரில் நீள்சதுர சலவைக்கற்களில் இறந்தவரின் தகவல்கள் பொறிக்கப்பட்ட பல நினைவுப் பலகைகள்  வரிசையாக பொருத்தப்பட்டிருந்தது. போரில் அல்லது சுனாமி போன்ற பேரழிவுகளில் காணாமல் போனவர்களின் நினைவிடமாக  இருக்குமோ? அல்லது நிலம் வாங்கிப் புதைப்பதற்கு வசதியற்றவர்கள் எரித்துவிட்டு நினைவுக்கற்களை மட்டும் பொறித்திருப்பார்களோ? வசதி வாய்க்கும் போது யாரிடமாவது விசரிக்க வேண்டும்

பிற்கால நினைவுக்கற்கள் தனிச் சலவைக்கற்களால் ஆனது. பலதும் கறுப்பு வெள்ளை நிறங்களைக் கொண்டது. நவீன வடிவங்களில் இருந்தன. பலவற்றில் கவித்துவமான கல்லறை வாசகங்கள் இருந்தன. பின் நவீனத்துவ கூறுகள் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லைப் போலும். ஒரு கல்லறை இதயத்தின் வடிவத்தில் இருந்தது. காதல் வயப்பட்ட காலத்தில் மரித்தவள் உள்ளே உறங்குகிறாள் என எண்ணிக்கொண்டேன்.

சற்று புறம்பாக செம்பளுப்பு நிற சலவைக்கற்களால் அமைக்கப்பட்ட நடுகற்கள் பல கூட்டங்கூட்டமாக காணப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட குறிப்புகள் சீன அல்லது ஜப்பான் மொழிக்குடும்ப எழுத்துக்களில் அமைந்திருந்தன. கனடா ஒரு பல்கலாச்சார நாடுதான். இருந்தாலும் ஒவ்வொரு இனக்குழுமமும் தத்தமது கலாசாரத்தை பேணியபடி, அல்லது பேண முற்பட்டபடிமிஞ்சிப்போனால் குறைந்தபட்சம் அவர்தம் அடையாளத்துக்காக போராடியபடி தங்களுக்குள் கூட்டங்கூட்டமாகவே வாழ்கிறார்கள். அடுத்த இனங்களோடு கலப்பதென்பது சொற்பம். ‘செத்தாலும் இணையோம்என்பதைப் போல கல்லறைகளிலும் அப்படித்தானா?

ஒரு வண்ணத்து பூச்சி ஒவ்வொரு கல்லறையாக அமர்ந்தெழுந்து சென்றது. ஏதோ சேதிசொல்லிப் போவது போலபுலுனி அல்லது மைனா வகைசார்ந்த ஒரு குருவிக் கூட்டம் கல்லறைகளின் மேலிருந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தனகல்லறையில் உறங்குபவர் குருவி ரூபத்தில் எழுந்திருந்து ஒரவரோடு ஒருவர் பறைந்து கொண்டிருக்கும் தோற்றம் எழுந்தது.

நான் இறந்ததும் என்னை என்ன செய்வார்கள்?. நான் அதற்கு என்ன செய்து வைக்க வேண்டும்? பலரும் இருப்பில் பணம் போட்டு வைப்பார்கள். தனக்குத் தானே கல்வெட்டெழுதி வைத்தவரைப் பார்த்திருக்கிறேன். அவர் பாட்டன் பூட்டன் காலத்து தோம்பு தோரனம் எல்லாம் அதில் இருந்தது. நான் இவையெல்லாம் அவசியமா எனக்கேட்டபோது தன் பேரன் பூட்டிகாலத்திற்கு எம் முன்னோர் பெருமையெல்லாம்  தெரியவேண்டும் என்றார். இவர் பங்குக்கு என்ன செய்து வைத்தார். கல்வெட்டெழுதியதைத்  தவிர. கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்த பெண்ணைப் பார்த்தேன். அவள் அதற்குமுன் செய்துவைத்த வேலை தனது உடலிலிருந்து புடவை கலையாதிருக்க  நிறையப் பூட்டூசிகளை பயன்படுத்தியிருந்தாள்.   இறந்தபின்பு கூடத் தன் அங்கங்களை அடுத்தவர் பார்த்து விடக்கூடாது. தன் மானம் போய்விடக் கூடாது என்ற எண்ணப் பாடல்லவா? நான் என்ன செய்துவைக்க வேண்டும்.
எரித்துவிடுங்கள். என் நினைவாக எதாவது ஒரு பூங்காவில் நிழல்தரு தருவொன்றை நாட்டுங்கள். வேண்டுமாயின் அடியில் ஒரு கல்லிருக்கையை போட்டுவையுங்கள். என் நினைவுவரும்போது ஒரு ஐந்து நிமிடம் இருந்துவிட்டுப் போங்கள். நான் பறவைகளோடு பேசிக் கொண்டிருப்பேன்எனப் பிள்ளைகளிடம் செல்லிவைக்கலாமா?

ஆசை எந்தெந்த வழியிலெல்லாம் சிந்திக்கவைக்கிறது. என் வாழ்வு என்பது எனக்கும் மரணத்துக்குமான போரட்டம். மரணம் என்னோடு நிழல் போலவே தொடர்கிறது. அதனிடமிருந்து பலதடவை தப்பித்து வந்திருக்கிறேன். ஆனாலும் என்றோ ஒருநாளில் அதனிடம் தோற்பேன். அது தெரிந்தது.. தோற்றபின் என்ன வாழ்வு? என் அவாதோற்றவனுக்கு வாழ்வுதான் உண்டாஅதற்குப்பின் நான் என்னவானால் தான் எனக்கென்ன? அதற்குப் பிறகான தெரிவு எனக்குரியதல்லவே?.  அது இருப்பவர்களுக்குரியது. அவர்கள் நினைக்கும் படி வாழ்வது மட்டுமே எனக்குரியதுஇன்று அவரவற்குள்ள நெருக்கடியில் போனவர்களை சிந்திக்க ஏது நேரம்? அவர்களுக்கு ஒரு சுமையை ஏன் விட்டுச் செல்லவேண்டும்.

வேணிற் காலத்தை அழகு படுத்துவதற்கென்றே விதவிதமான பறவைகள் வந்துவிடுகின்றன. அவற்றின் காமமும் காதலும் கூத்தும் கும்மாளமும் இளவேனிட்காலத்துக்கு புது உத்வேகத்தைத் தருகிறது. அருகருகே உள்ள இரண்டு நடுகற்களின் மீது  அழகிய இணைகள் குந்தியிருக்கிறன. நல்ல மினுக்கென்ற கருநீலத் தலை. வயிற்றுப்புறம் செம்பளுப்புதலையில் பெரிய கொண்டை. ஆணழகன் போட்டிக்கு வந்திருப்பது போலிருக்கிறது. அது அடுத்த நடுகல்லில் இருக்கும் தன் இணையை மையலுக்கழைத்ததுஇவை இரண்டும் இனிய காதலர்களின் நடுகற்களாக இருக்குமோ? பெயரைப் பார்க்கும் ஆவல் உந்த அருகே சென்றேன். அதிலிருந்த பதிவு எனக்கு புரியக்கூடிய மொழியல்ல.

சில ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு நாட்டில் ஒரு நள்விரவில் என் இளையவன் திடீரென போய்விட்டான். உடனே பாரீஸ் புறப்படவேண்டியிருந்தது. நான் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே சச்சரவுகள் தொடங்கி விட்டன. மரணத்தின் போது சச்சரவுகள் வருவதொன்றும் புதிதல்லஎம்மவர்க்கு இயல்புதான். சச்சரவு இல்லை என்றால் அதுவேதான் புதினம். அவன் இலக்கியப் பரப்பில் மிகத்தீவிரமாகச் செயற்பட்டவன். ஓரு சிற்றிதழ் கூட நடாத்திவந்தான். அந்தவகையில் இது வழமையிலிருந்து சற்று மாறுபட்ட சச்சரவு. அவனது உடலைப் புதைப்பதா? அல்லது எரிப்பதா? இதுவே எனக்கு முன்வைக்கப்பட் கேள்வி. நாங்கள் பிறப்பால் சைவர்கள். ஏரிப்பதே வழக்கம்இருந்தாலும் கண் மூடிக்கொண்டு மதக் கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் அல்லஎன்னை விடவும் சிறப்பாக மதங்கள் சொல்லிய கோட்பாட்டிற்கு எதிராகச் செயற்பட்டவன் போய்விட்ட தம்பி. என்னைப் பொறுத்தவரையில் இறந்தவனுக்கு ஒரு கண்ணியமான வழியனுப்பும் சடங்கு வேண்டும். அது எதுவாக இருந்தாலும் காரியமில்லை. குடும்பத்தில் மூத்தவன் என்ற வகையில் இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு என் தலையில் விழுந்தது. ஒரு புறத்திலே அவனது நன்பன். மறுபுறத்தில் என் மற்றைய இளவல்கள்.

நண்பன், தனது மகளுக்கு மரணம் சம்பவித்தபோது என் தம்பி சொன்ன கூற்றை அப்படியே என்னிடம் ஒப்புவித்தான்.

எல்லோரும் செய்வது போல நீ எரிக்காதே. காசைப்பாரது ஒரு நிலத்தை வாங்கி புதைந்து நடுகல் இடு. உன் மகளின் நினைவெழும் பொழுதெல்லாம் நீ அந்த இடத்துக்கு வரலாம். அப்போது உன் மகளோடு உடனிருக்கின்ற உணர்வு கிடைக்கும்.’

எனவே அவன் விரும்பியது புதைப்பதைத்தான் என்றான். உண்மையில் இது ஆறுதல் வார்த்தைகள்தான். இதன்பின்தான் எனக்கு ஒரு நடைமுறையும் புரிந்தது. அந்த நண்பன் கிறிஸ்தவன்கிறிஸ்தவர்கள் புதைப்பதை வழக்கமாக கொண்டவர்கள். புலம் பெயர்ந்த பிற்பாடு இடுகாட்டில் நிலம் வாங்கிப் புதைப்பதென்பது பொருள் ரீதியாக எம்மவர்க்கு பெருத்தசுமை. பலருக்கு எரிக்கவே வசதிப்பட்டது. இதற்கு இன்னொரு காரணியும் இருந்திருக்கலாம். புலம் பெயர்ந்த பிற்பாடும் நெடுங்காலமாக ஊர் மீளும் அவாவோடு வாழ்தவர்கள் எம் மக்கள். அதனால்  புலம்பெயர்ந்த நாட்டில் இடுகின்ற நடுகற்களை ஊர் மீண்டால் என்ன செய்வதுஇப்போது எல்லோருக்கும் யதார்த்தம் தெரியும். எல்லோரும் புகலிட நாடுகளில் வேருன்றி அகலக்கிளை பரப்ப தொடங்கி விட்டனர். பலரும் வசதி படைத்தவர்களாகி விட்டார்கள்.  பழையபடி வழமைக்கு திரும்பி வருகின்றனர்.

என் பக்க உறவுகளின் கூற்று வேறுவிதமாயிருந்தது. அது மதம் சார்ந்ததோ உரிமை சார்ந்ததோ அல்ல.  ‘’நண்பர்கள் இப்போது உணர்வு வேகத்தில் எல்லாம் சொல்வார்கள். சிலநாள் கழிந்தால்  எல்லாவற்றையுமே மறந்துவிடுவார்கள். அவரவர் ஓட்டத்தோடு அவர்கள் வாழ்க்கை அடங்கிவிடும். யாருமே கல்லறையைத் திரும்பிப்பார்க்கக் கூட நேரமிருக்காது.  அது அனாதரவாக இருக்கும். நாங்கள்தான் பார்க்க வேண்டும். அதைவிடவும் வழக்கதில் உள்ள முறமையை பின்பற்றுவதே மேல்என்றார்கள். இதை விடவும் இறந்தவன் பகிர்ந்துகொண்ட சம்பவம் ஒன்று என் நினைவை குறுக்கறுத்தது.

இவன் போவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் ஒரு துயரம் நிகழ்ந்தது. இவனுக்கும் இளைய தம்பி ஒருவன் திருமணமாகி சரியாக ஒருவருட வாழ்வில் அவனது துணையை இழந்தான். முதல் மகப்பேற்றிலேயே மரணம் அவளைக் கொத்திச் சென்றது. மிக துயரமான சூழல். ஒருவாரத்தின்பின் சடங்குகள் எல்லாம் முடிந்தது. மறு காலை நகரின் மத்தியில் உள்ள நதியோரம் சகோதரர்  நாங்கள் நால்வரும் குந்தியிருந்தோம். அவளது அஸ்தியை கரைத்தபடிஅப்போது உடலை எரிப்பது தொடர்பாக இவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

எரிப்பதென்பது வெறும் உடலை மட்டும் எரிப்பதல்ல. இதிலை பெரிய தத்துவமே இருக்கிறது. எரிப்பதென்பது எல்லாவற்றையும் எரிப்பது. நினைவுகளை, துயரங்களை, கடந்தவைகளை எல்லாவற்றையும்  எரிப்பதென்பதன் குறியீடு. நடந்தவை எல்லாவற்றையும் நினைத்து சோம்பி கிடக்காமல் எல்லாவற்றையும் எரித்துவிட்டு புதியவாழ்வுக்குள் நுழைவது. எம் முன்னோர் எதையும் அர்த்தமில்லாமல் செய்யவில்லை. வாழ்வு வலியதுநீ நடக்கவேண்டிய தூரம் மிகப்பெரிது.  நீயேதான் அதை நடந்து கடக்கவேண்டும்.’

அவனது ஞானத்தின் ஆழத்தை கண்ட பெருமிதத்துடன் மௌனமாக இருந்தேன். இது வெறும் ஆறதல் வார்த்தைகளாக எனக்கு தோன்றவில்லை. நீரில் அஸ்தி கரைந்து கரைந்து கலந்து மறைகிறது. அவன் வார்த்தைகள் அடைத்து கண்கள் இன்னும் குளமாகவே இருக்கிறது. இவன், துயருற்ற மனதைக் கரைக்கின்ற முயற்சியிலிருக்கிறான்வயதில் சிறியவன். அவள் பெற்றுப்போட்ட பச்சைக் குழந்தை வேறுஅவன் புதிய வாழ்வொன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்இந்த அக்கறையின் வெளிப்பாடாகவே அந்தக் கரைத்தல் நிகழ்ந்தது.

தன் நண்பனுக்கு கூறியதும் சகோதரனுக்கு கூறியதும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் அது இருப்போர் மனதின் துயரத்தை கரைக்கும் முயற்சியல்லவா? வாழ்வு பற்றிய அக்கறையின் வெளிப்பாடு அல்லவாநானும் இந்த இலக்கியப்பரப்பில் இயங்குபவன். இது போன்ற பல சம்பவங்களை கடந்து வந்தவன். நண்பர்கள் வேன்டுமாயின் அவனது பெயரில் சமூகத்திற்குகந்த வேறு காரியங்களை செய்யலாம்இந்த இடத்தில் என் பட்டறிவுக்கு உறவினர் கூற்று சரியெனப்பட்டது.

இரண்டு கூஸ் பறவைகளின் கூச்சல் என் சிந்தனையை கலைத்தது. அவையிடும் எச்சங்களிலிருந்து கல்லறைகளை காப்பதற்காக யாரோ பணியாளன் அவற்றை துரத்தியிருக்க வேண்டும். அவற்றின் கூப்பாட்டில் மிகக்கொருரமும் துயரமும் நிரவியிருந்தது . சில சமையம் அவை வைத்த முட்டைகளை விட்டுப் போகின்ற துயரமோ? இப்போது நான் கல்லறைத் தோட்டத்தின் தென்மேற்குப்புற மூலைக்கு அண்மையாக வந்துவிட்டேன். மூதாட்டியொருத்திபேர்ச்மவுன்டவீதி நுழைவாயில்கார்ப்பார்க்கில் தன் காரை நிறுத்திவிட்டு பூங்கொத்தோடு கல்லறைத் தோட்டதினுள் விரைகிறாள். தள்ளாதவயது. துணைக்கு கூட யாரும் இல்லை.   கறுப்பு நிறக் கல்லறையின் மேல் மஞ்சற்பறவையொன்று சிறகை அகல விரித்து வெய்யில் காய்கிறது.

ஒருவட்டச் சுற்றில் முக்காற்பங்கு தூரத்தை கடந்து விட்டேன். நடைபாதையின் வலப்புற ஒரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது ஒரு பீரங்கி வண்டிஇரண்டாம் உலகமாயுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாக தகவற்பலகை பொறிக்கப்பட்டிருக்கிறது. பழமைப் பொருட்கள் என்ற வகையில் அழகுக்காகத்தான்  நிறுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் கல்லறைத் தோட்டத்திற்கும் பீரங்கிக்கும் இடையேயான தொடர்பென்ன? அந்த யுத்தத்தில் மரணித்தவர்களின் கல்லறைகளும் இதனுள் இருக்கக்கூடுமோ?.  யோசித்தபடி இருபது கவடு தூரம் நடந்திருப்பேன்எதிர்புறமாக மற்றொரு பீரங்கிவண்டி. மனசு கேட்கவில்லை. ஒரு தடைவை இரண்டு பிரங்கிகளின் இடயில் நின்று கல்லறைத் தோட்டத்தைப் பார்த்தேன். பீரங்கியின் பின்னால் ஆயிரக்கணக்காக கல்லறைகள் பரந்து கிடக்கிறது பெரியதொரு பாறாங்கல் மார்பை அமுக்குவதை போன்ற உணர்வு. என் முன்னே விரிந்து கிடக்கிறது முள்ளிவாய்கால்திடுக்குற்று நிமிர்கிறேன். என் முன்னே தத்திசென்ற மனக்குருவி அடியுண்டு வீழ்ந்து கிடக்கிறது.
நிணமும் தசையுமாய்.
0000

நன்றி: "கூர் 2012"